பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பாக பலத்த சந்தேகங்கள் மகிந்த ராஜபக்ச அரசு சார்ந்த பகுதிகளில் உருவாகியுள்ளன. ராஜபக்ச அதிகாரத்தினுள் இப்போது உள்முரண்பாடுகள் ஆழமடைய ஆரம்பித்துள்ளதன் அறிகுறியாகவே இக் கொலைகள் கருதப்படுகின்றன.
முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் உண்மையில் எமக்கொரு பேரழிவாகும். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறுவதாகவும், விசாரணைகள் முடிவடையும் வரை இது குறித்த விபரங்களை வெளியிட முடியாது எனவும் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.
யார் முதலில் சுட்டார் என்பதை கண்டறிவதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி துப்பாக்கி பிரயோகத்தில் ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர பலியானதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை தேர்தல் நடை பெற்ற 23 உள்ளூராட்சி மன்றங்களில் 21 மன்றங்களை ஐ.ம.சு. கூட்டமைப்பு வென்றமை தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.