ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் பேரறிஞர்களும் கலை இலக்கிய மேதைகளும் தோன்றியுள்ளார்கள். இவர்கள் தமது சிந்தனையால் எழுத்துக்களால் செயற்பட்டவர்கள் என்றவகையில் மனித இனத்தின் நாகரீகம், கலாசாரம், பண்பாடு என்பவற்றை மேன்மையடைய செய்திருக்கின்றார்கள்.
கலையும் இலக்கியமும் காலத்திற்கேற்பவும் சமுதாய சூழலுக்கு ஏற்பவும் பிறப்பெடுக்கின்றன. ஆனால் அதே காலத்தில் அச்சூழலில் வாழ்கின்ற யாவரும் ஒரே விதமான சிந்தனைகளை பிரதிபலிப்பதில்லை. அப்படி பிரதிபலித்தாலும் அவை அழகாகவும் நேர்த்தியாகவும் அமைவதில்லை. திறமைமிக்க படைப்பாளிகளும் சிந்தனையாளர்களுமே தமது காலத்துக்கேற்ற சிந்தனையை நேர்த்தியாக வெளியிடுகின்றனர். அவ்வகையில் சமுதாயம் எனும் விளைநிலத்தின் பயிராக தோன்றிய சிந்தனையாளர்கள், மேதைகள் அச்சமுதாய அமைப்பினை உருவாக்குதிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர். இந்த பின்னணியிலே கார்க்கியை நோக்குதல் காலத்தின் தேவையாக உள்ளதுடன் அவரது ஆளுமையை சரித்திர சூழலில் வைத்த புரிந்துக் கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.
கார்க்கி 1868ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வால்கா நதிக்கரையில் உள்ள நிஷ்னி நோவ்கொராட் (Nizhny Novgord) எனும் ஊரில் ஏழ்மை மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அலக்ஸி மாக்மோவிச் பெஸ்கோவ்(Aleksey Maksimovich Peshkov). கார்க்கி என்றால் கைத்துப் போனவன் என அர்த்தம். இவரது தந்தை தச்சு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். மிக இளமையான வயதிலேயே தமது பெற்றோரை இழந்துவிட்ட கார்க்கி செல்லவெனாத் துன்பங்களை அனுபவித்ததால் அப்பெயரை சூடிக் கொண்டார்.
கார்க்கி தமது வாழ்க்கையை பொது மக்களுக்காக அர்பணித்தார். அவ்வாழ்க்கையை சுமையாக கொள்ளாமல் அதனையே தமக்கு விருப்பமான வாழ்க்கையாகவும் ஆக்கிக் கொண்டார். அவரது எழுத்துக்களின் பின்புலமாக அமைந்தது அவரது வாழ்க்கையேயாகும். கார்க்கியை போல தமது இளமை வாழ்க்கையில் கடும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தவர் வேறு யாருமாக இருக்க முடியாது என்றே கூற வேண்டும். 12 வயதிலேயே உழைக்கத் தொடங்கி விட்டார். இந்த காலப்பகுதியில் அவர் சமையல் காரன் ஒருவருக்கு எடுபிடி வேலை செய்கின்றவராக இருந்தார். அவர் பாடசாலைக்கு சென்று கல்விக் கற்கவில்லை. பின்னர் கடை சிப்பந்தியாக, சுமை கூலியாக, துறைமுக கூலியாக ஹோட்டல் தொழிலாளியாக, ரொட்டி சுடுபவராக, பறவை பிடிப்பவனாக, நூல் நிலைய குமாஸ்தாவாக, ரொட்டிக் கிடங்கு பணியாளனாகவும், செம்படவனாகவும், காவல் காக்கும் வாட்ச்மேனாகவும் வாழ்க்கை நடத்தி அந்த அனுபவங்களின் ஊடாக தமது கல்வியை தொடர்ந்தவர்.
……… கார்க்கியின் வாழ்வில் ஏற்பட்ட மிகத் துயரமான சம்பவம் 1887ம் ஆண்டில் செம்டம்பர் 12ந் தேதி இரவு 8 மணிக்கு நிஸ்ஸி நோவ் குரோத் என்ற ருஷ்ய நகரமொன்றின் பொத்தியஸ்னயா என்ற வீதியில் நிகழ்ந்தது. பல தினங்கள் துன்பங்களுக்கு மேல் துன்பம் அனுபவித்து, வேலை கிடைக்காமல் நகர் பூராவும் பல தினங்கள் பட்டினியுடன் சுற்றிச் சுற்றி அலைந்து, வாழ்க்கையில் கடுமையான வெறுப்புண்டு கார்க்கி துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டார். தன்னைச் சுடுவதற்கு முன்னர் அவர் எழுதிய குறிப்பு மிக்க வேடிக்கையானது. அதை எண்ணி அவர் அடிக்கடி பல நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தான் சுட்டுக் கொண்டு சாவதற்கு உலகப்பிரசித்திப்பெற்ற ஜேர்மன் தேசத்தப் புலவர் ஹைன்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதோடு, மனிதனுக்கு உண்டாகும் இதயவலி பற்றி எனக்கு முதன் முதலில் உணர்த்திய கவிஞர் இவன்தான் என்று ஹைனுக்கு வாழ்த்தும் கூறி இருந்தார். சில மாதங்களில் கார்க்கி சுகமடைந்து ஆஸ்பத்திரியிலிருந்து வெறியேறினாலும் கூட அவர் சாகும் வரை இந்த சூட்டினால் ஏற்பட்ட தசை குறைபாடுகள் அவரைத் துன்புறுத்தியே வந்தன.
எனது பருவகாலத்தை வறுமைத் தேவன் கபளீகரம் செய்து விட்டான் என்று கார்க்கி அடிக்கடி சொல்வார். என்றாலும் அவர் அதற்காக வேதனைப்படுவதே இல்லை. 24 வயது நிரம்பும் வேளையில், ஆறு மாதங்களுக்கு அதிகமாகவே கார்க்கி மயானத்தில் பிணங்களின் தலைமாட்டில் இருந்து விடியும் வரை 25 ரூபிள் கூலிக்கு பிராத்தனை செய்துள்ளார். இந்தத் தொழிலை கார்க்கி ஆறு மாதங்கள் தான் செய்தார் என்ற போதிலும், அவரின் வாழ்க்கை வஜ்ர உறுதியும் தெம்பும் மிக்கதாக உரம் பெற இது ஒரு காரணமாக இருந்தது. செத்த பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து நுகர்ந்த கார்க்கி, வெளியெ தன்னைச் சுற்றியும் வாழ்ந்த உயிருள்ள மக்கள் மத்தியில் நிலவிய வறுமையால் பெருந்துயரால் ஏற்பட்ட பிணவாடையை நீக்கும் லட்சியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டார்.1
அந்தவகையில் அந்த அந்த காலத்தில் ருஷ்யப் சமூகத்தில் இடம்பெற்ற கொடுமைகளையும், அடக்கு முறைகளையும், நேருக்கு நேர் கண்டது மட்டுமன்றி அவ்வாழ்க்கையை அனுபவித்தவராகவும் காணப்படுகிறார். உழைக்கும் மக்கள் திரளின் வாழ்க்கையும் கொடுமைகளையும் காணவேண்டும் என அவா கொண்டிருந்த கார்க்கி நாடோடி போல் பல இடங்களுக்கும், நாடுகளுக்கும் சுற்றித்திரிந்தார்.
கார்க்கி தமது 17வது வயதிலே எழுதத் தொடங்கிவிட்டார். அவரிடம் மிக இளமை காலத்திலிருந்து எழுத்தார்வம் காணப்பட்டது. அவரது வாசிப்பு திறனை அக்காலக்கட்டத்தில் ஊக்குவித்த இருவர் பற்றிய குறிப்புக்களை நாம் அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக உள்ளது. தாம் சிறுவனாக இருக்கும் போது சமையல் காரர் ஒருவருக்கு உதவியாக கார்க்கி வேலை செய்தார் என்பதை முன்னர் பார்த்தோம். ஓர் சமயற்காரர் இவரது வாசிப்பு ஆர்வத்தை தூணடுபவராகவும் அதற்கான விலைமதிப்பற்ற உதவிகளை செய்கின்றவராகவும் காணப்பட்டார். மற்றவர் கார்க்கின் வாழ்க்கையில் முக்கிய பாத்திரமாகவும் அவரின் அன்புக்குரியவராகவும் விளங்கிய அவரது பாட்டி. இது தொடர்பில் ருஷ்யப் பயணத்தை மேற்கொண்டு கார்க்கியின் பாட்டி பொறுத்து அவரது மனைவியுடனான உரையாடலில் பெற்ற அனுபவத்தைக் எச்.எம்.பி முஹிதீன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
கார்க்கி தனது இறுதிகாலம் வரை இரண்டு விஷயங்களை அவர் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கடுமையான வெறுப்புணர்ச்சியுடன் கண்டிப்பார். இதில் ஒன்று அநீதி விளைத்த அக்கிரமமே தனது தலையாய கடமையெனக் கொண்டிரந்த ஜார் ஆட்சியும், கொணல், மாணல் முதலாளித்துவ சமுதாயமுமாகும். மற்றயது அவரது தந்தையை கொடுமைப்படுத்தி அடித்தும் கொன்ற கார்க்கியின் பாட்டனார.; ஷஷதுயர் படிந்த, கண்ணீர் நிறைந்த இருள் குவிந்த கார்க்கியின் சிறுபிராய வாழ்வுக்கு அன்புத்திரி கொண்டு இன்ப ஒளி ஏற்றியவர், கார்க்கியின் பாட்டி அக்குவினா இவானோவ்னா ஆவார். இந்த மூதாட்டி மாத்திரம் இல்லாதிருந்தால் கார்க்கி எட்டு வயது நிரம்புவதற்குள்ளேயே நம்மை விட்டு மறைந்திருப்பார். கார்க்கி தனது பாட்டியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் என்னிடம் கூறுவார். ஷஷஅவள் தான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் எனக்கு போதித்தவள். மனிதத்துவ மாண்பினை அவளின் அனுபவத்திலிருந்து சிருஷ்டியான ராஜா ராணிக் கதைகள் தான் எனக்கு தெளிவாக பாடம் சொல்லித் தந்தன என்பார். பாட்டி இவானோவ் கூறிய சின்னஞ்சிறிய கதைகளை எழுத்தில் வெளிவராத அந்த அமர சிருஷ்டிகளை அனுபவ மாண்மியங்களை தனது இறுதிக் காலம் வரை தலை சிறந்த நூல்களாக, இலக்கிய செல்வங்களாக எங்கும் கிடைக்க முடியாத பொக்கிஷம் என மதித்து கார்க்கி பேணிப் பாதுகாத்து வந்தார்.2
இத்தகையை வாழ்வியலின் பின்னணியிலிருந்து தன்னை பட்டைத் தீட்டிக் கொண்ட அவர் புத்தகங்களை தமக்கு அந்நியப்பட்டதாகவோ அல்லது அவற்றை வேண்டாத குப்பை கூலங்களாகவோ கருதியவர் அல்லர். மாறாக கார்க்கி வாசிப்பதிலே திவிர கவனம் செலுத்தினார். அதனூடாக உலக அனுபவங்களை பெற்று புதியதோர் வாழ்க்கைக்கான நாகரீகத்தை சிருஷ்டிக்கும் திறனைப் பெற்றிருந்தார் என்பதை அவரது எழுத்தக்கள் எமக்கு எடுத்து காட்டுகின்றன. புத்தகங்கள் பற்றிய அவரது எண்ண ஓட்டம் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.
அச்சு கோர்ப்பவன் என்கின்ற அத்துறையின் உழைப்பு நாயகன் ஒருவனால் பிறிதொரு உழைப்பு நாயகனால் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு யந்திரத்தின் உதவியுடன், ஒரு அச்சகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய புத்தகத்தை நான் கையில் எடுக்கும் போது அது ஒரு மனிதனால் தன்னைப்பற்றியும், உலகிலே எல்லாவற்றையும் விட மிகவும் சிக்கலானதும், மிகவும் மர்மமானதும், மிகவும் நேசிக்க கூடியதுமான ஒன்றினைப் பற்றியும், உலகத்திலேயே அழகும் மேன்மையும் பொருந்திய அனைத்தையும் தன் உழைப்பாலும் கற்பனையாலும் படைத்த ஒன்றினைப் பற்றியும் எழுதப்பட்ட அற்புதமான என்னுடன் பேசும் ஆற்றல் படைத்த ஜீவனுள்ள என்னுடைய ஆன்மாவொடு கலந்துவிட்ட ஒன்றாக நான் உணருகிறேன்.3
புத்தகத்தை ஜீவனுள்ளதாக கருதும் கார்க்கி அது தன்னுடன் பேசுவதாக கூறுகின்றார். யாவற்றுக்கும் மேலாக அது மனிதனைப்பற்றி மனிதனால் எழுதப்பட்டது எனக்கூறுகின்றார். இவரது சிந்தனைகள் காலத்துடன் விசாலிப்பதுடன் மக்களையொட்டியதாக வேர்கொண்டு கிளைபரப்புவதைக் காணலாம். மனிதன் குறித்த இந்த பார்வையும் சிருஷ்டிகர திறமையுமே மனித குலத்தின் மகத்தான படைப்பாளியாக்கியது. மனிதன் குறித்த அவரது பார்வை!
மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் அவனே, இயற்கை சக்திகளின் எதிர்காலத் தலைவன் அவனே, இவ் உலகின் அதியற்புத அழகுப் பொருட்கள் எல்லாம் அவனது உழைப்பால் ஆனவை. நான் மனிதனுக்கு தலை வணங்குகின்றேன், ஏனெனில் மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பால் நான் இவ்வுலகில் வேறொன்றையும் காண முடியவில்லை.
உலகத்திலுள்ள அழகு அனைத்தம் மனிதன் படைப்புத்தானே? இயற்கையின் வனப்பை மனிதன் மிஞ்ச முடியுமோ என்று நீங்கள் முணுமுணுக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் அழகு இல்லை அது நமக்குப் பெரிதும் பகைமை கொண்டது. ஆன்மாவின் ஆழத்தில் மனிதனே சிருஷத்த ஒன்றுதான் அழகு.4
இவ்வாறு மனித குலத்தின் யௌவனத்தையும் அழகையும் உணர்ந்திருந்த கார்க்கி தனது சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் நாகரிகத்திற்காக அதனை நகர்த்தி செல்கின்ற போது எழுத்தாளன் குறித்தும் இலக்கியப் படைப்பின் கடமைப்பாடு குறித்தல் பின்வருமாறு எழுதுகின்றார்.
ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞன் தனது வாழ்வை, விதியை மக்களின் விதியோடு, அவர்களுடைய விடுதலை, மேம்பாடு, மற்றும் மகிழ்கரமான வாழ்க்கை ஆகியவற்றுக்கான போராட்டத்தோடு இணைக்கின்ற போதுதான் அவன் புனர்ஜென்மம் எடுக்கின்றான். அவனுடைய படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ, ஒரு குறிப்பிட்ட நாட்டையோ சார்ந்தவையாக இருக்க முடியாது. அவை சர்வ வியாபகமானவை, காலத்தை வென்றவை.
ஆனால் ஒரு எழுத்தாளன் உழைக்கும் மக்களிடமிருந்து பிரிந்து, தன்னை தனிமைப்படுத்தி நிற்பதன் மூலம், மக்களுடைய போராட்டங்களில் இணையாமல், அவர்களுடைய போராட்டங்களைப் பார்த்தும் பாராமல் இருப்பதன் மூலம் அவன் மக்களிடமிருந்து அந்நியமாக்கின்றான். இதனால் அவன் தன்னுடைய ஆளுமையை அழிக்கின்றான். அவனுடைய எழுத்துக்கள் வலிமையற்று நபுஞ்சகத்தன்மை உடையவனாக அமைகின்றன.5 எனக் கூறுகின்றார்.
கார்க்கி தாம் வாழ்ந்த காலத்தில் ருஷியப் புரட்சியை சந்தித்தவர். புரட்சிகர போராட்டங்கள் யாவற்றிலும் இணைந்து நின்றவர் என்ற வகையில் 1917 இல் நடைப்பெற்ற அக்டோபர் புரட்சியே கார்க்கியை முழு ஆளுமைக் கொண்ட படைப்பாளியாக மாற்றியது.
கார்க்கி பற்றிய அவரது மனைவியின் நினைவலைகளில் சில குறிப்புகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
‘கார்க்கிக்கு ஒவ்வொரு நாட்டு இலக்கியங்கள் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும் நன்கு தெரிந்திருந்தது. அவர் பல தடவைகளில் பல்வேறு நாட்டு எழுத்தாளர்களுக்கு, அவர்கள் நாட்டு இலக்கியங்களை வைத்தே விமர்சனம் செய்யக்கேட்டு நான் அதியமுற்றுள்ளேன். ஒரு தடவை இத்தாலிய எழுத்தாளர்கள் சிலர் இதே வீட்டுக்கு கார்க்கியைக் காண வந்திருந்தார்கள். அவர்களுடன் கார்க்கி நீண்ட நேரம் சம்பாஷனை நடத்தினார். சோவியத் இலக்கியம் பற்றியும், உலக இலக்கியங்களைப் பற்றியும் அவர்கள் கார்க்கியுடன் நீண்ட நேரம் பல கருத்துக்களில் தர்க்கம் செய்தனர். முடிவில் அவர்கள் விடைபெற்றுச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கிய வேளையில் அவர்களுக்கு கார்க்கி, இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பற்றியும், அதன் வழிவழி வரும் இலக்கிய மாண்பினைப் பற்றியும் நீண்ட சொற்பொழிவொன்றே ஆற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். முடிவில், அந்த இத்தாலிய விமர்சகர்கள் விடைபெறும் போது உங்களின் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் எல்லோருக்கும் பயன் கிடைக்கும் என்று கார்க்கி நல்லுறை கூறி அனுப்பினார். அவர்களுடன் ஏன் அம்மாதிரி வேண்டா வெறுப்பில் நடந்து கொண்டீர்கள் என்று அவர்கள் சென்ற பிறகு நான் கார்க்கியிடம் கேட்டேன் கடிந்தும் கொண்டேன். அதற்கு அவர், என்னிடம் செய்த தவறை அவர்கள் வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்பதற்குதான் என்று பதில் கூறினார். கார்க்கியின் சூடான வார்த்தைகள் இவ்வெழுத்தாளர்களில், விமர்சகர்களில் பலரைத் திருத்திய நற்செய்தியை, பின்னர் அவர்கள் இத்தாலியிலிருந்து கார்க்கிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.’6
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு ஐரொப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவும் என்பன முற்றுப் பெற்று ஏகாதிபத்தியம் என்ற கட்டத்திற்குள் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் ருஷியா மட்டும் அரை நிலப்பிரபுத்துவ நாடாக விளங்கியது. இவ்வாறான சூழலில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்தையம் உழவர் வர்க்கத்தையம் இணைத்து போராடி, முதலாளிய ஜனநாயகத்திற்கு கீழான ஒரு அரசினை உருவாக்கியிருக்க முடியும். அது அவ்வாறு செய்பட்டதற்கு காரணம் அதன் நலன் சார்ந்து அமைந்திருந்ததை காணலாம்.
சரக்கு உற்பத்தி வளர்ச்சி பெறுவதால் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள்ளேயே இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. வணிகத்திலும் பண்ட உற்பத்தியிலும் ஈடுபடும் பூர்சுவாக்கள் அல்லது முதலாளி வர்க்கம் ஒரு வர்க்கம்ளூ மற்றொன்று பாட்டாளி வர்க்கம். இவர்கள் பஞ்சப்பட்ட உழவர் வர்கக்கத்தில் இருந்தே பெரும்பாலும் வருகிறார்கள். இவர்களிடம் உழைப்புச் சக்தியைத் தவிர வேறெந்த உடமையும் இல்லை. கூலிக்காக இவ் உழைப்புச் சக்தியை முதலாளிகளிடம் விற்கிறார்கள். இவ்வாறாக முதலாளியம், சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியைத் தடை செய்யும் நிலப்பிரபுக்களுக்கும், உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் பாட்டாளிகளுக்கும் எதிராக நிற்கிறது. நிலப்பிரபுக்களைப் பொருத்தமட்டிலும் புரட்சிகரமானதாகவும், பாட்டாளிகளைப் பொருத்தமட்டிலும் எதிர்ப் புரட்சிகரமானதாகவும், உள்ள இந்த இரட்டைப் பண்பு, முதலாளியத்தின் இறுதிக் கட்டத்தில், உழவர் வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கம் தன்னை தலைவனாக அமர்த்திக் கொண்டு அவற்றின் ஆதரவோடு நிலப்பிரபுக்களைத் தூக்கி எறிந்து, தன்னையே ஒரு ஆளும் வர்க்கமாக நிறுவுகிறது. முதலாளி வர்க்கப் புரட்சி என்பது இதுதான்.
1905 ஆம் ஆண்டு இடம்பெற்ற புரட்சியில் இப் பண்பினைக் காணலாம். மறுப்புறமாக பாட்டாளி வர்க்கம் அதன் நேச சக்திகளுன் இணைந்து புரட்சிகர உணர்வை பெற்றிருந்ததுடன் அது தமது எசமான வர்க்கத்தை எதிர்த்து பொராடத் தொடங்கியது. இந்த சூழலில் ஜார் அட்சியை பலப்படுத்துவதே இப் புரட்சியை தடுப்பதற்கான ஒரே மார்க்கம் என்பதை ஏக போக முதலாளிகள் அறிந்திருந்தனர். அந்தவகையில் அவர்களது வர்க்க நலன் சார்ந்து ஜாரை ஆதரித்து நின்றனர்.
அன்றைய சூழலின் யதார்த்தை ரொட்ஸிகி யதார்த்த சூழலில் வைத்து நோக்கத் தவறியதன் காரணமாக ஒரு நாட்டில் சோஷலிசம் எனும் விடயத்தை தவறாக புரிந்துக் கொள்கின்றார்கள். பாட்டாளிவர்க்க சர்வதிகாரத்தை குறுகிய எல்லைகுட்பட்டதாக கருதிய ரொஸ்ட்கி பாட்டாளிவர்க்க கலை பண்பாடு வெறும் கற்பனாவாத புனைவுகளாகக் கருதினார். பட்டாளிவர்க்க சர்வதிகாரம் குறுகிய காலத்துக்குரியதா இருபு;பதனால் பாட்டாளிவர்க்க கலை பண்பாட்டை உருவாக்க முடியாது எனக் கருதினர். இதன் பின்னணியில் வர்க்கம் கடந்த கலைப் பண்பாடு என்ற சிந்தனையை முன்வைத்தார். இது தொடர்பில் ரொஸ்ட்கியின் பின்வரும் கூற்று முக்கியமானது. ஷஷஒரு கலைப்படைப்பை புறக்கணிப்பதா அல்லது ஏற்றுக் கொள்வதா என்பதில் மார்ஸிய கொள்கையை எப்போதும் கடைபிடிக்க முடியாது. அது சொந்த கலை விதிகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்கிறார். அந்தவகையில் அரசியலில் மார்க்சியம் கலையில் முதலாளியம் என்ற நிலைபாடு ரொஸ்ட்சியால் முன்வைக்கப்பட்டது. அந்த இலக்கியப் போக்கு ரொஸ்ட்சியின் வார்த்தைகளில் சொன்னால் ஷஷபழைய சாதனைகளை அப்படியே விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு புதிய வர்க்கமாக பாட்டாளிவர்க்கம் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்| என்பதை முன்வைத்து அந்த போக்கு தமக்கு முன்னோடியுள்ள முதலாளிய விழுமியங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள விழைந்தது.
இதற்கு நேர் எதிர் மாறாக தூய பாட்டாளிவர்க்க கலைக் கோட்பாடும் முன்வைக்கப்பட்டது. இந்த சிந்தனையை முன்வைத்தவர்களில் பொக்டனொவ் முக்கியமானவர் பொக்டனொவின் நோக்கில் கலை ஒரு வர்க்கத்தின் சித்தாந்தத்தின் பகுதியாகும். அதன் வர்க்க உணர்வின் ஒரு கூறாகும். எனவே கலை வர்க்க வாழ்வின் ஒழுங்குப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகிறது. வர்க்க சக்திகளை ஒன்றுபடுத்தி இணைக்கும் ஒரு கருவியாகின்றது. வர்க்கப் போராட்டத்தில் கலை ஒரு ஆயுதமாகும். ஒரு குறிப்பிட்ட வர்கத்தின் சித்தாந்தத்தை ஒவ்வொரு எழுத்தாளனும் பிரதிபிம்பம் செய்கின்றான். எடுத்துக்காட்டாக ஒரு கவிஞன் ஒரு திட்டவட்டமான வர்கத்தின் கண்களினூடாகத்தான் அதன் சிந்தனைகளினதும் உணர்ச்சிகளினதும் ஊடாகதான் உலகை நோக்குகின்றான். அதனைப் பற்றுகின்றான். எழுத்தாளனின் ஆளுமைக்கு அடியிலே கூட்டு ஆசிரியன் மறைந்திருக்கிறான். கவிதை இந்தக் கூட்டு ஆசிரியனின் தன்னறிவின் ஒரு பகுதியே. எனவே பொக்டனோவின் கோட்பாடு நிலையில் பூர்சுவர்க் கலையின் முற்றான நிராகரிப்பு தொக்கி நிற்கின்றது. காரணம்; பாட்டாளி வர்க்கத்திற்கு உதவாத வர்க்க மனப்பான்மையையே இக்கலை பிரதிபிம்பம் செய்தமையாகும்.8
மனித குலம் இதுவரைக் காலமும் சேகரித்து வைத்துள்ள சகல விடயங்களையும் நிகாரிப்பதற்காக இப்போக்கு அமைந்தது. பாட்டாளிகளாக இருப்பவர்களே கலை இலக்கியம் படைக்க முடியும் எனவும் அதற்காக ஆண் பெண் தொழிலாளர்கள் பாட்டாளிவர்க்க கலைக கூடங்கள் பட்டறைகள் மூலமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதையும் இப்பிரிவினர் வலியுறுத்தனர். இதுவரைக் காலமும் சேகரித்து வைக்கப்பட்ட பண்பாட்டை நோக்கி அதனுள் ‘ஒடுக்கும் பண்பாடு,’; ‘ஒடுக்குமறைக்குள்ளான பண்பாடு’ குறித்த பார்வையை செலுத்தி அவற்றில் பாட்டாளிவர்க்கத்திற்கு சார்பான போராட்ட கூறுகளை கவனத்திலெடுக்கத் தவறியதன் தவறியதன் விளைவாக இம் போக்கு வக்கற்ற புலம்பல்களுக்கே இவர்களை இட்டுச் சென்றது. பாட்டாளிவர்கத்துடன் ஐக்கியப்பட வேண்டிய நேசசக்திகளை தனிமைபடுத்தியதுடன் உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் கூனி குறுக செய்தது. இத்தகைய இரண்டு போக்குகளையும் லெனின் விமர்சனத்திற்குட்படுத்தினார். அது தொடர்பில் லெனின் பின்வருமாறு எழுதினார்.
சமகாலத்திய பண்பாட்டின் சிறந்த முன்மாதிரிகள் மரபுகள், விளைவுகள் ஆகியவற்றை மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் வழிநின்று கண்டறிந்த வளர்ச்சி நிலையாகவே புதிய பாட்டாளிவர்க்க கலை அமையுமே தவிர அது புதிய கண்டுபிடிப்பு அல்ல என்பதை பாட்டாளிவர்க்க கலை பற்றிப் பேசுகின்ற நாம் மனதிற் கொள்ள வேண்டும். மனிதவர்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானால் தான் பாட்டாளிவர்க்க கலை படைக்க முடியும். இக்கலை வானத்திலிருந்து குறிப்பது அல்ல. பாட்டாளி வர்;க்கக் கால நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர்களின் கண்டு பிடிப்பும் அல்ல. அப்படிச் சொல்வதெல்லாம். சுத்த அபத்தம். பாட்டாளிவர்க்க கலை என்பது முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சியாகும். 9
இவ்வாறு நமது பாரம்பரிய பண்பாடு மரபுகளிலிருந்து நாம் கற்க வேண்டியவற்றின் அவசியத்தை கூறுகின்ற லெனின் அதனை பாட்டாளிவர்க்க நலனுடன் இணைத்து உள்வாங்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்கின்றார். இப் போக்கானது தேசிய ஜனநாயக சக்திகளை தன்னுள் ஐக்கியப்படுத்தியப் படுத்தி யதார்த்தத்தை உணர்ந்து அந்த சூழலிலே பாட்டாளி வர்க்கம் சார்ந்த கலை இலக்கிய கோட்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற சிந்தனையை முன் வைக்கின்றார். இந்த போக்கினை ஆதரித்து நின்றவர் கார்க்கி.
இத்தகைய பின்னனியில் நின்றுக் கொண்டே கார்ககி சோஷலிச யதார்த்தவாதம் என்ற சிந்தனையை முன் வைத்தார். யதார்த்த வாதம் என்பது குறிப்பிட்டதோர் வரலாற்று சூழ்நிலையில் தோன்றிய தொன்றாகும். நிலமானிய சமுதாயத்தை மாற்றி முதலாளித்து சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கான போராட்டத்தில் நிலமானியத்தின் கொடுமைகளை தோலுரித்துக்காட்ட வேண்டியதன் தேவை ஏற்பட்டதன் விளைவாக யதார்த்தவாதம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தது. இப்போக்கு சமூகத்தின் எண்ணற்ற முரண்பாடுகளை ஊடுருவி அதன் சாரம்சமான போக்குகளை வெளிக் கொணர்வதில் முக்கியத்துவம் பெற்றது. யதார்த்த வாத கலைப்படைப்பி;ல் வகை மாதிரியான பாத்திரப்படைப்பு முக்கியமானதோர் அம்சமாகும்.
சோஷலிச யதார்த்த வாதம் என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தோற்றம் பெற்ற ஒன்றாகும். முதலாளிய அமைப்பை தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் சோஷலிச சக்திகளால் முன்வைக்கப்பட்ட சிந்தனையாகும். யதார்த்தவாத்தில் உழைக்கும் மக்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டாலும் அவை மனிதாபிமான சித்தரிப்புகளாகவே அமைந்தன. அவை சமூக முரண்பாடுகளை வெளிக் கொணர்வதில் முக்கியத்துவம் மிக்கனவாக காணப்படுகின்றன. ஆனால் சோஷலிச யதார்த்தவாதத்தில் சமூக முரண்பாடுகள் பகை கொண்ட வர்க்கங்களின் முரண்பாடாக கண்டு அதனை உழைக்கும் மக்களின் ஒன்றினைந்த போராட்டத்தை நோக்கி நகர்த்தி செல்கின்றது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியின் போது சோஷலிச யதார்த்தவாதம் முக்கியமான இலக்கிய போக்காக திகழ்ந்து. இதனை கலைப்படைப்பாக்கியதில் முதன்மையானவர் கார்க்கி. அவரது தாய் நாவல் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.
1939ல் நடைபெற்ற சோவியத் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டில் மாக்ஸிம் கார்க்கி சமர்ப்பித்த அறிக்கை கூறியது ஷஷவாழ்க்கை என்பது செயல், வாழ்க்கை என்பது படைப்புத் திறன் என்கிறது சோஷலிச யதார்;த்தவாதம். இயற்கைச் சக்திகளின் மீதான மனிதனின் வெற்றிக்கான, அவனின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்குமான உலக வாழ்வின் மகத்தான மகிழ்ச்சிக்கான அவனின் பெருமதிப்பு வாய்ந்த தனிமனித ஆற்றல்களின் தடையற்ற வளர்ச்சியே இதன் நோக்கமாகும். மனிதனின் தேவைகள், ஆசைகள் ஆகியவற்றின் நிலையான வளர்ச்சிக்கேற்ப இந்தப் பூவுலகை ஒரே குடும்பமாய், வாழும் மனித குலத்தின் அற்புதமான விளைநிலமாக மாற்றுவதே அதன் நோக்கமாகும்.10
இந்த வகையில் புதியதோர் உலகைப் படைக்கும் சமூகமாற்றப் போராட்டத்தில் சோஷலிச யதார்த்தவாதம் நிதர்சனமானதோர் இலக்கிய கோட்பாடாக திகழ்ந்தது. இதனை அறிவாலும் உள்ளுணர்வாலும் தமதாக்கி கொண்ட கார்க்கி அதன் ஒளியிலேயே தமது சமூகம் குறித்தும் மக்கள் குறித்தும் கருத்துக்கள் கூற காண்கின்றோம்.
கலை இலக்கியத்தை சமூகமாற்றத்திற்கான கருவியாக நோக்குகின்றபோது கோடான கோடி உழைக்கும் மக்களை அவர்களின் நலன் சார்ந்த போராட்டத்திற்கான ஐக்கியப்படுகின்ற போது அவர்களை அரசியல் மயப்படுத்துவதற்கு இலக்கியமும் அவசியமானதொன்றாகின்றது. இதன் காரணமாக தான் மார்க்ஸ், லெனின், ஹோசிமின் முதலானோர் கலை இலக்கியம் குறித்து அக்கறை செலுத்த தலைப்பட்டனர். இந்த சூழலில் தமது அரசியல் போராட்டங்களுக்கான சாதகமாக கலை இலக்கியத்தை நோக்கினர். இங்கு தவிர்க்க முடியாத வகையில் இலக்கியம் என்று பாட்டாளி வர்க்க செயற்பாட்டின் முக்கிய பகுதியாக திகழ்கின்றது. கட்சி இலக்கியம் தொடர்பில் அக்காலக்கட்டத்தில் லெனின் எழுதிய ஷஷகட்சி ஸ்தாபனமும் கட்சி இலக்கியமும்|| (1905) என்ற கட்டுரை எதிர் முகாமினரால் கடுமையான தாக்குதல்களுக்கு உட்பட்டன. கலை இலக்கியம் இலக்கிய கர்த்தா என்பவற்றை சமுதாயத்திலிருந்து பிரித்துப் பார்த்தவர்களுக்கு கலை இலக்கியத்திற்கு அரசியலுக்கும் இடையிலான உறவு குறித்து பேசியது அலர்ஜியை ஏற்படுத்தியது.
லெனின் தமது கட்டுரையின் ஊடாக இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் வர்க்க முரண்பாடுகளுக்கும் இடையிலான உறவுக் குறித்து அழகுற தெளிவுப்படுத்தினார். அவர் குறிப்பிட்ட கட்சி இலக்கியம் என்று கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்ட முனைவதாக அல்லாமல் பாட்டாளி வர்க்கத்தில் பொது லட்சியமான கம்யூனிசம் என்ற மனித குலத்தின் மகத்தான போராட்டத்தில் மக்கள் இலக்கிய கர்த்தா அதனை முன்னெடுத்து செல்லக் கூடிய இயக்கத்தை பற்றியதாகவும் அதனை சரியான திசைமார்க்கத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் யாவற்றுக்கும் மேலாக அப்போராட்டத்தில் மக்களை ஐக்கியப்படுத்தி அவர்களின் அரசியல் உயர்வை வளர்ப்பதாகவும் கட்சி இலக்கியம் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார். கார்க்கியின் சகல படைப்புகளிலும் இந்த சிந்தனைப் போக்கை காணலாம். தாய் என்ற நாவல் அக்டோபர் புரட்சியில் முக்கிய பாத்திரம் வகித்தாலும் அப்புரட்சி எத்திசை நோக்கி செல்கின்றது என்பதனை எடுத்துக் கூறியதாலும் கட்சி இலக்கியத்திற்கு முன்னோடிப்படைப்பாக திகழ்கின்றது எனலாம்.
அதே சமயம் கார்க்கி குறித்த நேசப்பூர்வமான விமர்சனங்களும் அவ்வவ் காலங்களில் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய விமர்சனங்களை முன் வைத்தவர்களில் லெனின் முக்கியமானவர். லெனின் அரசியல் போராட்டத்தில் வகித்த பங்கு எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது கார்ககி இலக்கிய தளத்தில் வகித்த பாத்திரமாகும். மதம் குறித்த கார்த்தியின் பார்வையுடன் லெனின் முரண்படுகின்றவராக காணப்பட்டார்.
அதே நேரத்தில் கார்க்கியின் எழுத்துக்களில் வந்த சில சித்தாந்தத் தவறுகளை எடுத்துக்காட்டிட லெனின் தவறவுமில்லை. காhர்க்கி எழுதிய ஒரு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு ஒரு பத்தி இருந்தது.
கடவுளை நாடுவது தற்சமயத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். அது ஒரு பயனற்றவேலை. காணுவதற்கு இல்லாத ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பது வியர்த்தமானது. விதைக்காமல் அறுவடைசெய்ய முடியாது. இப்போது கடவுள் கிடையாது ஏனெனில், நீங்கள் அவரை இன்னும் சிருஷ்டிக்க வில்லை. கடவுள்களைத் தேடவேண்டியதில்லை. அவர்கள் உண்டுபண்ணப்படுகின்றனர். மக்கள் வாழ்க்கையைக் கண்டு பிடிப்பதில்லை, அவர்கள் அதைச் சிருஷ்டிக்கின்றனர்.
இதை எடுத்துப்போட்டு கடவுளைத் தேடுவதனைத் தற் காலிகமாகத்தானே ஒத்திவைக்கச் சொல்லுகிறீர்கள்? கடவுளைத் தேடுவது, கடவுளைச் சிருஷ்டிப்பது என்பவற்றிற்கிடையில் அப்படி என்ன வேறுபாடு இருக்கிறது? மஞ்சள் பேய்க்கும் நீலப்பேய்க்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உண்டோ அவ்வளவு வேறுபாடுதானே இந்த இரண்டிற்கும் இடையிலும்? தங்களது எழுத்தில் இப்படிப்பட்டதொரு மோசமான சித்தாந்தக் குறைபாடு வரலாமா? இப்படிக்கேட்டு ஒரு காரசாரமான கடிதம் அவருக்கே எழுதினார் லெனின்.11
சமூகமாற்;ற போராட்டங்களின் போது எதிர்புரட்சி கலவரங்களை கண்டு கலக்கமடைந்த கோர்க்கி ஒரு சந்தர்ப்பத்தில் கிறிஸ்த்தவ கம்யூனிசம் பற்றிக் கூட போசத் தொடங்கினார். ஆனால் பலமான கட்சி அமைப்பு என்ற ஒன்று இருந்தாலும் அதில் லெனின் ஸ்டாலின் போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்தாலும் மீண்டும் புரட்சி வழியில் தம்மை புணரமைத்துக் கொண்டு புரட்சி வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்.
முதலாவது உலக போதுக்கு பின்னர் ஏகபோகங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த வளரச்சிப் போக்கின் பின்னனியில் சிறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் சிதைவுண்டனர். சமுதாயத்தில் தோன்றுகின்ற முரண்பாடுகள் சமுகத்தை வரண்ட பாலைவனமாக்கிவிடும் என்ற அச்ச உணர்வு பலரை பாதித்திருந்தது. தனிமனித சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் அதேசமயம் ஏகபோகத்தையும் விமர்சிக்க முடியாமல் தங்களுக்குள்ளேயே புழுங்கி போயினர். இப்பின்னணியில் தான் ஃபிராய்டு போன்றோரின் உளவியல் கோட்பாடுகள் தோற்றம் பெற்றன. ஆரம்பத்தில் ஹிஸ்டீரியா நோயாளிகள், நரம்பு நோயாளிகள் போன்றோரின் பரிசோதனைக்hக பயன்பட்ட இக்கோட்பாடு பின் முழு மனித சமூதாயத்திற்குரியதாகவும் மாற்றப்பட்டது. ஒரு விதத்தில் யதார்த்த தளத்தை விட்டு விலகி ஆழ்மண புலம்பல்களுக்குள் இக்கோட்பாடு தஞ்சம் புகுவதனால் முதலாளிய உலகம் வெகுவாக வரவேற்றது. நடைமுறையில் இக்கோட்பாடு பாட்டாளி வர்க்க போராட்டத்திற்கும் அதனால் ஏற்படக் கூடிய நம்பிக்கைக்கும் விரோதமாக செயற்பட்டது. இதன் காரணமாக தான் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக தோன்றிய எழுத்தாளர்களான எஸ்ராபௌண்ட, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஃபிரான்ஸ் காப்ஃகா, டீ.எஸ்.எலியட் போன்றோர் இப்போக்கினை சார்ந்து இலக்கியம் படைத்தனர். நமது யுகத்தில் மார்க்ஸியத்தை நிராகரிப்பதற்காக இக்கொள்கை பயன்படுத்தப்பட்டு வருவதனை காணலாம்.
கார்க்கி இப்போக்கினை விமர்சனத்திற்கு உட்படுத்தினார். இக்காலச் சூழலில் வளர்ச்சி பெற்று வந்த தொழிலாளி வர்க்க போராட்டத்தையும் அதற்கு உந்துதலாக இருந்த கட்சியையும் பிரதிபலித்து வந்தது கார்க்கியின் எழுத்துக்கள் நம்பிக்கை தரக் கூடியவனாக இருந்தன.
1936 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 18ஆம் திகதி கார்க்கி தமது இல்லத்தில் திடீர் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறுப்பட்ட வதந்திகள் பரவிவருகின்றன. கார்க்கியின் புரட்சிகர ஆளுமையின் காரணமாக அவருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர் ஒருவர் அவரை சிறுக சிறுக விஷம் கொடுத்து கொன்றதான செய்தி காணப்படுகின்றன. மறுப்புறத்தில் எதிர் புரட்சியாளர்கள் கார்க்கியை கொன்றனர் என்ற செய்தயும் காணப்படுகின்றன. இயற்கையில் இறப்பு எனவும் சில செய்திகள் வெளியாகின. எது எவ்வாறாயினும் அன்று பல மேதைகள் சமூகமாற்றம் போராளிகள் பலர் அன்று ஏகாதிபத்தியத்திற்கு துணைப்போன வைத்தியர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஆதாரமாகக் கொண்டு நோக்குகின்ற போது கார்க்கியை கொன்றதற்கான ஆதாரங்களே அதிகமாக காணப்படுகின்றன.
வலிமையுடையதாய் அவரது எழுத்துக்கள் திகழ்ந்தமையினால் தான் அவரை உலக இலக்கியத்தின் முன்னோடியாக கொள்கின்றோம்.
அடிக்குறிப்புகள்
1. முஹிதீன் எச்.எம்.பி. (கட்டுரையாசிரியர்) (2001) சரஸ்வதி கஞைசியம் கலைஞன் பதிப்பகம் சென்னை – பக்.105
2. மே.கு.நூ. பக்
3. பாலதண்டாயுதம் – கே (1992) ஷஇலக்கியத்தில்; மனிதநேயம்| நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவட் விமிட்டட் , சென்னை பக் – 13.
4. மே.கு. நூ. பக். 14.
5. பொன்னயன் நீர்வை (1991), ‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’ குமரன் புக்ஹவுஸ் , சென்னை பக் 04.
6. முஹிதீன் எச்.எம்.பி – மே.கு. நூ. 110.
7. தாம்ஸன் ஜார்ஜ் – (1981) மார்க்ஸ் முதல் மாசேதுங்வரை கிழைக் காற்று வெளியீட்டகம், சென்னை பக்.24.
8. மே. கு. நூ. பக். 29.
9. இரவீந்திரன் ந. (1996) பின் நவினத்துவம் அழகியலும்,. வவுனியா நண்பர்கள் வட்டம்ஈ; வவுனியா பக் – 12,13
10 அலன் ஸ்விஞ்வுட் ( தமிழில் கணரட்னா ஏ.ஜே.) 1981, அலை வெளியீடு யாழ்ப்பாணம் – பக் 23
11 அருணன் (1990), மார்க்சிய அழகியல், சிட்டு பதிப்பகம், மதுரை பக.; 82.
12. மே.கு. நூ. பக் 109
தோழர்கள் யாருக்கேனும் கார்க்கியைத் தெரியாது போல.மெளனமாகவே இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் இலங்கையில் தரமான காகிதத்தில் விளங்கமுடியாத தமிழில் தோழர்கள் பேசும்போது அவர்களூக்கு மூள குழம்பிய்தாகவே நான் நினைத்ததுண்டு ஆனால் இலக்கியம் ரஸ்யாவிலும்.ஸ்பெயின் மொழியிலும் சிறப்பாக் இருப்பதை வாசிப்பின் ஊடாக அறீந்து கொண்டேன்.செக்கோவின் சிறூகதைகளீல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.
முதலாளித்துவம் செய்கின்ற கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு தொழிலாளி வர்க்கம் காட்டுகின்ற பொறுமை விசித்திரமானது என்று கொதித்தவர் கார்க்கி.