22.11.2008.
அணுவாயுதப் போரின் அன்றாட அச்சுறுத்தல், சூழல் அனர்த்தம், உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரத்தில் வீழ்ச்சி என்பனவற்றை அடுத்த இரு தசாப்த காலத்தில் உலகு காணப்போகின்றது.
அமெரிக்காவின் அறிவுத்துறை சார்ந்த சமூகமே இந்த கணிப்பீட்டை வெளியிட்டிருப்பதாக “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
உணவு, நீர் உட்பட வளங்கள் தொடர்பான மோதல்கள் அதிகரிக்கும். போக்கிரி நாடுகளும் பயங்கரவாதக் குழுக்களும் அணுவாயுதங்களை தொடர்ந்தும் அதிகளவில் வைத்திருக்கும். நெருக்கடி நிலைமை நீடித்திருக்குமென்றும் அமெரிக்க அறிவுத்துறை சமூகத்தை பரந்தளவில் உள்ளடக்கிய ஆய்வு அமைப்பான தேசிய கூர்மதியாளர் பேரவை (Nச்tடிணிணச்டூ ஐணtஞுடூடூடிஞ்ஞுணஞிஞு இணிதணஞிடிடூ) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா ஓவல் அலுவலகத்திற்குள் பிரவேசம் செய்யவுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் எந்தவொரு புதிய ஜனாதிபதியும் எதிர் கொள்ளாத சில சவால்களை எதிர் நோக்கியுள்ளார். அந்தத் தருணத்தை முன்னிட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அணுவாயுதங்களை பயன்படுத்தும் சாத்தியம் அதிகரிக்கும். அத்துடன், தொழில்நுட்பத்துறையும் விரிவடையும். தேர்வுகளின் பரிமாணமும் விஸ்தரிப்படைந்து காணப்படும் என்று 121 பக்கங்களை கொண்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே அணுவாயுதப் போட்டி அதிகரித்திருப்பதை கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கும் ஆய்வாளர்கள், போக்கிரி அரசுகளின் தொகை அதிகரிக்குமெனவும் அந்த அரசுகள் பயங்கரவாதக் குழுக்களுடன் தமது நாசகார தொழில்நுட்பத்தை பங்கிட்டுக் கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். “அடுத்த 1520 வருடங்களில் ஈரானின் தீர்மானங்களின் எதிரொலியாக பிராந்திய நாடுகள் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கான முயற்சிகள், பரிசீலனைகளை அதிகரிக்க வழிவகுக்கும்’ என்று “உலகப் போக்குகள் 2025′ என்ற இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உலகம் வெப்பமடைதலானது நீர், உணவு, சக்தி வளப்பற்றாக்குறையை மோசமாக அதிகரிக்கும் என்று பிரிட்டனின் ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக வெப்ப வலயத்திலிருந்து 20 கோடி மக்கள் புலம் பெயர்வார்கள். பிறப்பு வீத இடைவெளியும் செல்வந்தர் வறியோர் இடைவெளியும் நீண்ட தூரமாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சர்வதேச முறைமையானது 2025 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு மாற்றமடைந்திருக்கும். சக்தி மிக்க நாடுகள் உருவாகும். உலகளாவிய பொருளாதாரம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு செல்வம் இடம் மாறியதாகக் காணப்படும். அரசாங்கத்தை சார்ந்திராதோரின் செல்வாக்கு அதிகரித்திருக்கும். தனியான சக்தி வாய்ந்த நாடாக ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்திருந்தாலும் அமெரிக்காவின் பலமானது இராணுவ மேலாதிக்கம் உட்பட வீழ்ச்சி காணும்.
இந்தியா, சீனா, கொரியா என்பன வளர்ச்சி கண்டு ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிணைந்து சக்தி மிக்கவையாக விளங்கும்.
வோல் ஸ்ரீட்டின் நிதி நெருக்கடியானது உலக பொருளாதாரத்தை மீள் சமநிலைப்படுத்துவதன் ஆரம்பம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் பெறுமதி மிக்க நாணயமான “டொலர்’ பலவீனமடையும். 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி காட்சிகள் மீளத் தோன்றும் சாத்தியம் குறித்தும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆயுதச் சண்டை, எல்லைகளை விஸ்தரித்தலில் இராணுவ போட்டிகள் என்பன அதிகளவில் இடம்பெறும் சாத்தியம் குறித்தும் எதிர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபிரிக்கா, தெற்காசிய நாடுகள் நல்லாட்சி தொடர்பாக சிக்கல்களை எதிர்கொள்ளும் எனவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் வளங்கள் பற்றாக்குறையால் இந்த நாடுகள் கடும் நெருக்குதல்களை எதிர் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
2025 வரை பயங்கரவாதம் நீடித்திருக்கும் என்று எதிர்பார்க்கும் அமெரிக்கா, புலனாய்வு சமூகம் ஆனால், வேறுபட்ட வடிவத்தில் இது காணப்படும் என்றும் கூறியுள்ளது. அத்துடன், அல்ஹைடாவின் “பயங்கரவாத அலை’ உடையும் என்றும் பரந்தளவிலான ஆதரவை அது திரட்டி கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் எதிர்ப்பு கூறப்பட்டுள்ளது.