முக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. பேஸ் புக் நிறுவனம் மேலதிகமான தரவுகளை அதன் உறுப்பினர்கள் தொடர்பாகச் சேகரிக்க ஆரம்பித்துள்ளது. Datalogix என்ற நிறுவனத்துடன் தரவுகளைச் சேகரிக்கும் நோக்கில் பேஸ்புக் பங்குதாரதாக இருந்து வந்தது. இந்த வருட ஆரம்பத்தில் மேலும் சில தரவு தரகர்களிடம் (data brokers) தாம் தகவல்களைச் சேகரிக்கப் போவதாக பேஸ் புக் அறிவித்தது.
பேஸ் புக் நிறுவனத்தின் பேச்சாளரான எலிசபத் டயானா, தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம் விளம்பரங்களுக்காகவே என்கிறார். விளம்பரதாரர்களின் விளம்பரங்களை தொடர்புடைய நபர்களிற்கு வழங்குவதற்காகவே இத்தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்றார்.
பேஸ் புக்கில் பெயர், பிறந்த திகதி, வசிப்பிடம், நண்பர்கள், ஆர்வம், பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெறும் தரவுகளோடு இணைத்து உறுப்பினர்களின் தரவுகளை முழுமையாக்குவதே நோக்கம் என டயானா தெரிவிக்கிறார்.
சில்லரை வணிக நிறுவனங்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனமான Datalogix என்பதைத் தவிர Acxiom Corp, Ark., Epsilon , BlueKai Inc. என்ற மூன்று முக்கிய நிறுவனங்களுடன் பேஸ் புக் தகவல்களைத் திரட்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக்கின் நடவடிக்கைகள் குறித்து பல உரிமை நிறுவனங்கள் ‘கவலை’ தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் ஆர்வலர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான கருவியாக பேஸ்புக் பயன்படுத்தப்படுகின்றது.
உலகின் மின்னியல் உளவு நிறுவனம் போன்று செயற்படும் பேஸ்புக் நிறுவனத்தில் இப்போது ஈழப் போராட்டமும் நடைபெறுகிறது.
யாழ்ப்பாணத்தின் அவலச் சூழலிலிருந்து பேஸ்புக் புகழ்பாடும் பாடல் ஒன்று வெளியாகியிருந்தது.