22.03.2009.
இலங்கையில் தொடரும் மோதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கான அழுத்தத்தை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டமொன்றை இலங்கை முன்வைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித், தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்குக் காணப்படும் அனைத்துத் தடைகளையும் விடுதலைப் புலிகள் உடனடியாக நீக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
“மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறாதவாறு தடுப்பதை நியாயப்படுத்த முடியாது. உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் உரிய தரப்பினருக்கு அழுத்தம்கொடுக்க முன்வரவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய சமூகத்தவர்கள் ஏற்றக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை இலங்கை மேலும் தாமதப்படுத்தாமல் முன்வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் ஸ்மித், அந்தத் தீர்மானது இலங்கை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதுடன், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தொடரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நாடுகளின் வரிசையில் தற்பொழுது அவுஸ்ரேலியாவும் இணைந்துள்ளது.