எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்; பலர் கடத்தப்பட்டார்கள்; பலர் காணாமல்போனார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே பதிலாகக் கொடுத்திருக்கின்றது என யாழ் ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைகளைக் கண்டித்து வடக்கு- தெற்கு ஊடக கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய கண்டனப் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களாகிய யாழ் ஊடக அமையத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கில் போர் நிறைவடைந்ததன் பின்னரும் கூட ஊடகத்துறை அச்சுறுத்தல் மிகுந்ததாக மாறியிருக்கும் நிலையில், பல ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஊடகப் பணி சந்திக்கப்போகும் அபாயங்கள் தொடர்பில் ஊடக சமூகம் அச்சத்தில் உறைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டின் இறுதியில் எமது சக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் தொடங்கிய ஊடகவியலாளர்கள் மீதான கொலைக்கலாசாரம் இன்று வரை தொடர்கிறது.
எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்; பலர் கடத்தப்பட்டார்கள்; பலர் காணாமல்போனார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே பதிலாகக் கொடுத்திருக்கின்றது. மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக சிறீலங்கா அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள ஊடக வன்முறைகள், சிறீலங்கா அரசாங்கத்தின் போர் ஊடகங்களுக்கு எதிராக திரும்பியிருக்கின்றதா என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கின்றது. வலம்புரி பத்திரிகையாளர் உதயராசா சாளின், ‘உதயன்’ பத்திரிகையாளர் திலீப் அமுதன், தினக்குரலை சேர்ந்த செல்வதீபன் எனப் பல ஊடகவியலாளர்கள்; இனந்தெரியாத நபர்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கின்றார்கள்.
‘தினக்குரல்’ பத்திரிகையின் செய்தியாளர்களான த.வினோயித், பி.வின்ஸ்லோ ஆகிய இருவரும் விடுதலைப் புலிகளின் பயிற்சி பெற்றனர் என்ற பொய்பிரசாரத்தை மேற்கொண்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில், பி.வின்ஸ்லோ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேபோன்று யாழ். உயர் பாதுகாப்பு வலய பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற எஸ்.நிதர்சன், வி.கஜுபன், எஸ்.கே.பிரசாத், எஸ்.கரன், எஸ்.தர்சன் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு படையினர் நேரடியாகவே உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மத்தியினில் எஸ்.கே.பிரசாத்தும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவற்றின் தொடர்ச்சியாக, கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள் வதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்களான கே.ஹம்சனன், வி.கஜூபன், எஸ்.நிதர்சன், எஸ்.மயூதரன், பெ.நியூமன், பி.பாஸ்கரன், சொ.சொரூபன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டை சுமத்துவதற்கு ஓமந்தை சோதனை சாவடியில் நின்றிருந்த இராணுவத்தினர் முயற்சித்திருந்தனர். இவ்வாறு வடமாகாணத்தில் ஊடகவியலாளர்கள் தினசரி தமது பணிகளை மிகுந்த அச்சுறுத்தல்களின் மத்தியில், உயிரை பணயம் வைத்தே ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்னொரு புறம் ஊடகங்களை முடக்க மான நஷ்டஈடு கோரி வழக்கு போடுவதும், ஆசிரிய பீட பிரதிநிதிகளை பலாலிக்கும், நான்காம் மாடிக்கும் அழைப்பதும் சாதாரணமாகிப்போயுள்ளது. மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் லெம்பேட் அத்தகைய விசாரணை வளையத்தினுள் வாழ்ந்தும் வருகின்றார். 24 மணி நேரமும் துப்பாக்கி முனைகளின் மத்தியில் அச்சத்துடனேயே வடக்கு ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றனர். அச்சுறுத்தப்படுவதும் பின் தொடரப்படுவதும் சாதாரணமாகியுள்ளது.
இத்தகைய சூழலில் ஊடகவியலாளர்கள் தமது தொழில் ரீதியான அறிவை பெறுவதற்கு கூட சிறீலங்கா அரசு தடுத்துவருகின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 25 ஆம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதற்கு முன்னர் இரு தடவைகள் யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் சிங்கள இனவாத அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டமை ஆகும். அவ்வகையான பயிற்சிப்பட்டறை ஒன்றிற்கு பயணித்த ஏழூ ஊடகவியலாளர்களை கஞ்சா குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து அவர்கள் மீண்டிருக்கின்றார்கள். அப்பட்டமாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழூள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து, சிக்கவைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியை அச்சத்துடன் நாம் அவதானிக்கின்றோம்.
எதிர்வருங்காலங்களில் என்ன நடக்கப்போகின்றதென்பதை, இச்சம்பவம் இயம்பி நிற்கின்றது. அவர்கள் தொடரப்படுவதும் அச்சுறுத்தப்டுவதும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இத்தகைய சதிமுயற்சிகளை வன்மையாக கண்டித்தும் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான கொலை முயற்சிகள் மற்றும் தாக்குதல்களை கண்டித்தும் சுதந்திரமாக ஊடகப்பணிகளை ஆற்றுவதற்கான சூழலை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கி கொடுத்திராத நிலையில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் வடக்கு ஊடகவியலாளர்களாகிய நாம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்புக்களிற்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றுள்ளது.