இந்திய ஒன்றியத்தில் இந்த ஆண்டு ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிற ஏனைய நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது.
மீண்டும் பிரதமராக மோடி வரவும், பாஜக இந்த மாநிலங்களில் மீண்டும் வென்றாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த மாநிங்களில் பாஜக வென்றால் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெல்வது உறுதியாகி விடும். மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நிலவும் அதிருப்திகள் எதுவும் இந்த மாநில தேர்தல்களில் பிரதிபலிக்கா விட்டால் இந்த மாநிலங்களோடு மேலும் சில மாநிலங்களில் வென்றாலே பாஜக மீண்டும் ஆட்சியமைத்து விடும். அதனால் எப்படியாவது இந்த தேர்தல்களில் பாஜக வென்றே ஆக வேண்டும் என்று பல்வேறு யுத்திகளை வகுத்து வருகிறது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் ஆகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான். இந்தியாவின் பெரிய மாநிலமும் அதுதான், கல்வியறிவு அல்லாத, வேலை வாய்ப்பியில் பின் தங்கிய, வளர்ச்சிக்குறைவான வறுமை மிகுந்த மாநிலமும் அதுதான். இந்து உணர்ச்சி அதிகம் உள்ள மாநிலமும் அதுதான் அதனால்தான் அது பாஜகவின் செல்வாக்கு மண்டலமாக இருக்கிறது. இந்நிலையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. விவசாய சங்கங்களின் பிரதான ஆதரவு அக்கட்சிக்கு இருக்கிறது. மாயாவது தனித்து போட்டியிடுகிறார். முஸ்லீம்களின் தலைவராக ஓவைசி போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் பிரியும். இந்நிலையில் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் விலகி வருகிறார்கள்.
பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா இவர் நேற்று கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்தார்.”பிற்படுத்தபப்ட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாஜகவில் மரியாதை இல்லை” என்று பாஜகவில் இருந்து விலகியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று ஐந்து மணி நேரத்தில் ரோஷன் லால் வர்மா, பிரஜேஷ் பிரஜாபதி, வினய் சக்யா, பகவதி சாகர் என நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்கள். அவர்கள் எக்கட்சியிலும் இணையவில்லை என்றாலும் விரைவில் அவர்கள் அகிலேஷ் யாதவை சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைவார்கள் எனத் தெரிகிறது.