இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதன் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே மவுரியா, தாராசிங் போன்றோர் பதவி விலகி அலிலேஷ் யாதவுடன் இணைந்திருக்கும் நிலையில் மேலும் ஆயுஷ் துறை இணை அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகி எந்த கட்சிக்கு செல்கிறார் என்பதை சைனி தெளிவுபடுத்தவில்லை. அதே சமயம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சைனியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அகிலேஷ் தனது ட்விட்டர் பதிவில், “சமூக நீதியின் மற்றொரு போராளியான டாக்டர் தரம் சிங் சைனியின் வருகையால், அனைவரையும் ஒன்றிணைக்க முயலும் நமது ‘நேர்மறை மற்றும் முற்போக்கான அரசியலுக்கு’ மேலும் உற்சாகமும் வலிமையும் கிடைத்துள்ளது. தரம் சிங்கை அன்புடன் வரவேற்று வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் கூறியுள்ளார்.
முன்னதாக, பதவியை ராஜினாமா செய்த மெளரியா, தாரா சிங் செளகான் பதவி விலகியபோதும் இதேபோல அவர்களுடன் எடுத்துக் கொண்ட படத்தை தமது சமூக ஊடக பக்கத்தில் அகிலேஷ் பகிர்ந்திருந்தார்.
காங்கிரஸ் கட்சி 40 சதவிகிதம் பெண்களையும் 40 சதவிகிதம் இளைஞர்களையும் வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறது. அகிலேஷ் யாதவ் பக்கம் ஆதரவு பெருகி வந்தாலும் இந்துத்துத்தின் இதயப்பகுதியான உத்தரபிரதேசத்தில் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிருக பலத்தோடு வென்றது.
கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நிற்கும் நிலையில் 30 சதவிகிதத்திற்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாஜகவை யார் வீழ்த்துவார்கள் என்பதே இப்போதைய கேள்வி.