இன்று அதிகாலை யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சாந்தி, சமாதானம் ஏற்படுத்தும் தமிழ்-சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அதன் அச்சுயந்திரத்திற்கு துப்பாக்கிச்சூடு நடாத்தி, கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.
இது சிறுகுணம் படைத்தவர்கள் செய்த செயல் இது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த தாக்குதலில் முழு பொறுப்பையும் மகிந்த ராஜபக்ச அரசு பொறுப்பேற்க வேண்டும்.
புலிகளை ஒழித்தது போன்று அரச தீவிரவாதத்தை தோற்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
குறுகிய காலத்தில் உதயன் பத்திரிகை மீது நடாத்தப்படும் 4வது தாக்குதல் இதுவாகும். இவ்வாறு திஸ்ஸ அத்தநாயக்கவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் மற்றொரு பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை அரச இராணுவத் துணைக்குழுக்கள் ஊடாக குறைந்தபட்ச ஜனநாயாக உரிமைகளையும் சிதைக்கும் நிலைக்கு இலங்கை அரச அதிகாரம் வளர்ச்சியடந்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல ஜே.வி.பி, மற்றும் அதன் பிளவுற்று குழுவின் உறுப்பினர்கள் அனைவருமே பிரதான பாத்திரம் வகித்துள்ளனர்..