உண்மை கண்டறியும் சோதனை பொய்யானது. ஒரு வழக்கின் தீர்ப்பில் உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றால் அதுவே நீதியைக் கொன்ற முதல் நடவடிக்கையாக இருக்கும் என்று பல் வேறு மனித உரிமை ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் நிதாரியின் சிறுமிகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கிலும் சரி மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் வழக்கிலும் சரி குற்றவாளிகள் என்று சந்தேகப்படுவோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை ஒரு சப்போர்ட்டிவ் ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவரின் விருப்பத்தை மீறி அவருக்கு மயக்க மருந்து கொடுத்து விசாரணை என்ற பெயரில் இது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நார்கோ சோதனை குறித்து இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அளித்துள்ள ஒரு உத்தரவில், எந்த ஒரு தனி நபரையும், இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு கட்டாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு விருப்பத்திற்கு மாறாக இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்வதன் மூலம் அது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.ஒருவரது விருப்பத்திற்கு மாறாக இதுபோன்ற சோதனைகளை நடத்துவது அரசியல் சட்டத்தின் 20-3வது பிரிவை மீறும் செயலாகும்.ஒரு வேளை ஒருவரது விருப்பத்திற்கு மாறாக இதுபோன்ற சோதனைகளை நடத்தினாலும் கூட அதன் முடிவுகளை சட்டப்பூர்வமான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.