உண்மையான தேர்தல் முடிவுகளை வெளிக்கொணர ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் விக்ரமபாகு கருணாரட்ன இறுதி இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவு தொடர்பான சந்தேகம் தமக்கும் நிலவுவதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் முறைப்பாட்டை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர் பெற்றுக் கொண்டுள்ள மாபெரும் வெற்றி எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் தலைவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகவும், தேர்தலில் சில முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான வேட்பாளர்களை விடவும் தாம் நாடு முழுவதிலும் சென்று தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில், தேர்தல் பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளாத சில வேட்பாளர்கள் எவ்வாறு தம்மை விடவும் கூடுதல் வாக்குகளைப் பெற்றக் கொண்டுள்ளார்கள் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை எனவும், பிரதான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தாம் ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடன் காணப்படுவது தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.