வன்னியில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த எமது உறவுகள் தலைமுடி வெட்டக்கூட முடியாத நிலையில் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, காலில் போட செருப்பின்றி பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு பிரஜைகளுக்குமான தார்மீக கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியினை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு ஜம்மியத் உலமா சபை தலைவர் ஜே.எம்.எம். கலீல் ஹாஜியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சிறுவர்களுக்காக வீட்டுக்கு ஒரு பால்மா பைக்கற் வழங்கும் திட்டத்தினை செயற்படுத்துகின்றது.
அதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டப் பணிமனையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
வன்னி மக்கள் சுய கௌரவத்துடன் முயற்சியால் உயர்ந்து வாழ்ந்தவர்கள். விவசாயத்தில் தன்னிறைவு கண்டவர்கள். அதேபோல் கல்வியிலும் உயர்ந்து சுய கௌரவத்துடன் வாழ்ந்தவர்கள்.
இன்று தனவந்தர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சாதாரண மக்கள் என அனைவரும் தங்களது தலைமுடியை கூட வெட்ட முடியாமல் வேடர்களைப் போல் காட்சியளிக்கும் காட்சியினை காத்தான்குடியில் இருந்து சமைத்துக் கொடுக்க நாங்கள் அனுப்பியவர்கள் அங்கிருந்து வந்து என்னிடம் மனவேதனை அடைந்து கூறியபோது என்னால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. தாங்கமுடியாமல் வேதனை அடைந்தேன்.
வன்னி மக்கள் கையேந்தி வாழ்ந்தவர்கள் அல்ல. ஆனால், இன்று ஒருநேர உணவிற்கு கையேந்தி கைகட்டி காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக சிறுவர்களுக்கு உதவ தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்வந்தமை பாராட்டுக்குரியது. ஏனைய திணைக்களங்களுக்கும் இது முன்மாதிரியாகவுள்ளது.
சிறுவர்கள் போஷாக்கற்றவர்களாக நலிந்து காணப்படுகின்றார்கள் என அறியக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் அவர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் எனத் தெரிவித்த அவர் அனைவரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
உதவிப் பணிப்பாளர் த. ஈஸ்வரராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண பணிப்பாளர் க. தவராஜாவிடம், வர்த்தக சங்கத் தலைவர் அமிர்தலிங்கம், ஜே.எம்.எம். கலீல் ஹாஜியார், பிரதேச சம்மேளன தலைவர்கள் இளைஞர் கழக உறுப்பினர்கள் பால்மாப் பைக்கற்றுகளை வழங்கினார்கள்.