இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த 15-ந் தேதி சாகும் வரை உண்ணா விரதம் தொடங்கினார். சென்னையை அடுத்த மறை மலைநகரில் இன்று அவர் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று காலை அவர் மிகவும் சோர் வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இன்று லுங்கி அணிந்திருந்தார். அவருக்கு 4 மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர்கள் உடல் நிலையை பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இன்று காலை அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ரத்த அழுத்தம் 90 இருக்க வேண்டும். ஆனால் 70 ஆக குறைந்தது. ரத்த சர்க்கரை அளவு 120 இருக்க வேண்டும். ஆனால் அது 83 ஆக குறைந் திருந்தது. இதனால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் காணப்பட்டது. தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டல் இருந்தது.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோர் சொந்த ஊரில் இருந்து மறைமலை நகருக்கு வந்தனர். அவர்கள் திருமாவளவன் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
இதற்கிடையே திருமாவளவன் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கருணாநிதி அவரது பிரதிநிதியாக ஆற்காடு வீராசாமியை அனுப்பிவைத்து உண்ணா விரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் உண்ணா விரதத்தை கைவிடும் படி கூறினார். அவர் களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வேண்டுகோளை புறக்கணிக்கவில்லை.
இப்போது உண்ணாவிரத பந்தலுக்கு பின்புறம் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப் படையில் உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றி முடிவு எடுப்பேன். தமிழ் மக்களின் நலன் கருதி அரசியல் கட்சிகள் ஒன்று பட்டு நிற்க வேண்டும்.
இலங்கையில் 5 லட்சம் தமிழர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கருத்து வேறு பாடுகளை மறந்து ஒன்றாக நிற்க வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றி கிடைக் கும். கருணாநிதியும், திருமாவளவனும் நாடக மாடுவதாக ஜெயலலிதா கூறுகிறார். அவர் தமிழர்களுக்கு விரோதமாக காழ்ப்புணர்ச்சியுடன் இதை கூறியுள்ளார். இந்த உண்ணாவிரதத்துக்கும், முதல்-அமைச்சர் கருணா நிதிக்கும் தொடர்பு இல்லை. அவர் மீது பழி சுமத்த வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஐ.நா. சபை இலங்கை தமிழர் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வரு கிறது. மனித உரிமைகள் மீறப்படுகிறது. அமெரிக்க மந்திரி கூட இதற்கு கண்ட னம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் செய்து அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் இந்திய அரசு மட்டும் பிடிவாதமாக உள்ளது. இதில் தமிழக அரசியல் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் கொழும்பு பயணம் பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போர் நிறுத்த முயற்சியில் ஈடுபடாமல் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறிஇருக்கிறார். அத்துடன் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் உள்ள நட்புறவு ஆழமாகவும் வலுவாகவும் உள்ளது என பூரிப்படைந்து இருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழ் உணர்வுக்கு எதிராகவே ஜெயலலிதா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட தமிழ்மான உணர்வுள்ள அனைவரும் அ.தி.மு.க. கட்சியில் இருந்தும் அந்த அணியில் இருந்தும் வெளியேற வேண்டும். ஈழத் தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டுமானால் அதில் உண்மையான அக்கறை இருக்குமானால் காங்கிரசையும், அ.தி.மு.க. வையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். மிகுந்த உருக்கத்தோடு இனமான உணர்வோடு வைகோ மற்றும் கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களுக்கு பணிவோடு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தவிர தமிழினம் அழிவது தவிர்க்க முடியாது. இது ஒரு குறைந்த பட்ச கோரிக்கைதான். வைகோவும், தா.பாண்டியனும் பரிவுடன் இதை பரிசீலிக்க வேண்டும். இது ஒரு நெருக்கடியான நேரம். ஆகவே இந்த வேண்டுகோளை ஒரு அறை கூவலாக விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறியதாவது:-
திருமாவளவன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து உங்கள் தலைவரை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத பந்தலில் திருமாவளவனுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நடிகர் மன்சூர் அலிகான், பொதுச்செயலாளர்கள் கலைக்கோட்டுதயம், சிந்தனை செல்வன், மற்றும் முகமது ïசுப், பாவரசு, வன்னி அரசு, ஆர்வலன், சேகுவாரே ஆகியோர் இருந்தனர். உண்ணாவிரதம் தீவிர மடைந்ததால் மாநிலம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாகனங்களில் குவிந்துள்ளனர்.
உண்ணாவிரத மேடையில் மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு செயலாளர் என்.வரதராஜன், திருமாவளவனை வாழ்த்தி பேசி னார். அப்போது அவர் “விடுதலை சிறுத்தைகள் போராட்டத்துக்கு மார்க் சிஸ்டு கம்ïனிஸ்டு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று கூறினார். சமத்துவ மக்கள் கட்சி சார்பாக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவர் சரத்குமார் சார்பாக இந்த போராட் டத்தை கைவிடும்படி திருமாவளவனிடம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் தா.வெள்ளையன் இன்று 4-வது நாளாக வந்து வாழ்த்து தெரிவித்தார்.
சினிமா டைரக்டர் அமீர், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்தார்.