படகு மீது ரோந்து கப்பல் மோதியதில் மாயமான பிளஸ் 2 மாணவர் உடல் மண்டபம் அருகே இன்று காலை கரை ஒதுங்கியது. இந்திய கடலோரக் காவல் படையின் அலட்சிய போக்கை கண்டித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து 10ம் தேதி மாலை 100க்கும் அதிகமான நாட்டுப்படகுகள் தொழிலுக்கு சென்றன. பாம்பன் மீனவர்கள் சந்தியா, அருள்தாஸ், இன்னாசி, பெர்ராஸ், பவுன்ராஜ் மகன் பிளஸ் 2 மாணவர் கால்வின் மில்லர் (16) ஆகியோர் சென்ற படகின் மீது அந்த வழியாக ரோந்து சென்ற இந்திய கடலோர காவல்படையின் கப்பல் மோதியது. இதில் படகு உடைந்து நீரில் மூழ்கியதால் படகிலிருந்த 5 பேரும் கடலில் குதித்தனர். கால்வின் மில்லர் தவிர எஞ்சிய நான்கு பேரும் 4 மணி நேரமாக உயிருக்குப் போராடி மற்றொரு நாட்டுப்படகு மூலம் கரை சேர்ந்தனர். இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை முகாமிற்கு தகவல் தெரிவித்தும் மாயமானவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆவேசமடைந்த மீனவர்கள் ராமேஸ்வரம் & மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாம்பனில், நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மண்டபம் அருகே அரியமான் கடல் பகுதியில் கால்வின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது கண்டறியப்பட்டது.
கடலோர காவல்படையினரை கைது செய்யக் கோரி சடலத்துடன் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தேக்கம் அடைந்துள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.