“கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பது போலவே இன்றைய ஈழ மாணவர்களின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கும் பல மாணவர்கள் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பி தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.
அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்கவேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பத்தினர் அகதி முகாம்களிலும், தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காக குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக் கொள்ளப் பழக்கப்பட்டுப் போயுள்ளனர்.
இது இப்படியிருக்க, ‘ஷெல் விழுந்தபொழுது நாங்கள் அன்றே செத்துப் போயிருந்தால் இதை விடவும் நன்றாக இருந்திருக்கும்’ என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள்.
1.5 லீற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும், அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணைய் வழங்கப்படுவதோடு ஒரு கிழமையின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத்தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை.
ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்தலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்பொழுது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இரு மடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இம் மக்களினது விருப்புவாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதிமக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பமே வழங்கப்படவில்லையென்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.
இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தினைக் கொண்டும், அரச வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தினைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.
வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியை சமீபத்தில்தான் இம் முகாம் வாசிகளுக்கு வழங்கியுள்ளது அரசு. அதுவும் கூட அதிகபட்சமாக இரு மாதங்களுக்கு மட்டும்தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொரு முறை முகாமுக்கு சமூகமளித்து, வெளியே சென்று வேலை பார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்த அனுமதிப்பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபை பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவு முறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய் சந்திக்க இருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும் கூடக் குறிப்பிட வேண்டும்.
முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள் கூட அதி நவீன பார்கோட் இலச்சினைகளுடனானவையாக இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியுடைய அனைத்துத் தகவல்களும் அடங்கப் பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள் கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும், முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை.
முகாம்வாசிகளுக்கு தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பி விட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது சம்பூரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால் கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றி கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இரு புறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ, கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி மக்கள்.
“நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால் கூட காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம்.”
தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையைக் கொண்டு சென்ற இம் மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய் விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்கு பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமைகளை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக் கொள்கின்றனர். தற்பொழுது வவுனியாவிலும் தற்காலிக தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்து போயிருக்கிறது.
குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காக சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக் கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்த போதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக் கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்த போதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள் குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான்.
இந்தக் கொத்தடிமை முள் வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம் முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும், முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை.
“இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டு செத்துப் போனார்கள். எப்படியாவது உயிர் பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடி வந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப் போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்பொழுது தோன்றுகிறது” அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்
//“நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால் கூட காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம்.”//
இலங்கை அரசுக்கும்,இலங்கை மக்களுக்கும் இதுவே நன்மையாக முடியும்.இனிய்ம் பிரித்தாள்வது மட்டுமே உட்காரணங்கள் எனும் பட்சத்தில் இதன் தாக்கங்கள் ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் பிரதிபலிக்கும்.
This is what United Sri Lanka can give to it’s Tamil population. Good, keep supporting Karuna (Col.) & Douglas (Sec. Gen)
It is also what those who tried to divide it delivered the Tamil people into. I mean the whole lot who took off from Vattukkottai 1976.