திமுகவுடன் கூட்டணி சேரும் முஸ்தீபுகளில் இருக்கும் ராமதாஸ் சமீபகாலமாக மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி நடக்கும் ஈழ ஆதரவு கூட்டங்களைத் தவிர்த்து வருகிறார். பழ.நெடுமாறன் தலமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் இருந்தும் ஒதுங்கினார் ராமதாஸ். இந்நிலையில் சென்னை விடுதி ஒன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட ராமதாஸ், ” தமிழர்களுக்கான தனிநாடு வேண்டும் என்ற விருப்பமும் எழுச்சியும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் கொழுந்து விட்டெரிகிறது. இந்த விருப்பமே விரைவில் தனி ஈழத்தை உருவாக்கி விடும். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை இணைத்த சுயாட்சி பெற்ற புதிய மாநிலம் தேவை. அது இந்தியாவின் கீழ் சுயாட்சி பெற்றிருக்கும் காஷ்மீரைப் போன்றிருக்கும். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான் இலங்கையில் சிங்களர்களும் தமிழ் மக்களும் இனி சேர்ந்து வாழவே முடியாது. சுதந்திர தமிழீழம் மட்டுமே இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்றார்” ராமதாஸ். இதில் காஷ்மீர் பற்றிய இவரது பார்வை நகைச்சுவையாக உள்ளது மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பும் உரிமையைக் கூட காஷ்மீரிகளுக்கு இந்திய அரசு மறுத்து வருவதோடும். அன்றாடம் காஷ்மீர் மக்கள் இந்தியப் படைகளாலும் பாகிஸ்தான் படைகளாலும் கொல்லபப்ட்டும் கடத்தப்பட்டும் வருகிறார்கள். காஷ்மீர் சுயாட்சி என்பது பேச்சளவில் கூட காஷ்மீரில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.