நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம்
தாதிமார்கள் இன்று புதன்கிழமை 24 மணிநேர பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரத்தியேகக் கொடுப்பனவு,
அபாயக்கொடுப்பனவு,
அரசாங்கத்தினால் வெளியிட்ட 1979ஆம் இலக்க சுற்றறிக்கையினை இல்லாமல் செய்தல்,
மாகாண ரீதியில் 70 வீதமும் தேசிய ரீதியில் 30 வீதமும் ஆட்சேர்தல் விதிமுறையினை இல்லாமல் செய்வதோடு தரம் – 1, தரம் 2 இற்கு இதுவரை பதவி உயர்வு வழங்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல்,
ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளாக நிர்ணயித்தல்
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கையினை முன்வைத்து தாதியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தொடர்ந்தும் கோரிக்கைகள் ஆளும் தரப்பினால் உதாசீனம் செய்யப்படுமாயின் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் பின்னிற்கப்போவதில்லை என்று அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தினப்பிரிய தெரிவித்தார்.
சிலாபம், குளியாபிட்டி, நிக்கவெரட்டிய, லேடி ரிஜ்வே, காசல், டி சொயிசா ஆகிய வைத்தியசாலை தாதியர்களை தவிர்ந்த ஏனைய அரச வைத்தியசாலை தாதியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.