இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால் உலகத்தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்துபோய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப்பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவைக் கூடுதல் செயலாளர் பி.ராமன். மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன்.இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்ரிரியூட் போர் ரொப்பிகல் ஸ்ரடீஸ் நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ராமன் கூறுவதாவது…
இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும் உணர்வுடனும் நினைத்துப்பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. காரணம் நமக்காக அவர் துடித்தார், நமக்காக பரிவு காட்டினார், நம்மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார். நாம் இரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.
ஆனால், இன்று ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் மத்திய அரசின் மீது குறிப்பாக காங்கிரஸ் மீதும் சோனியா காந்தியின் மீதும் மிகப்பெரும் வருத்தத்தில்,கோபத்தில் உள்ளனர்.
அதற்குக்காரணம், விடுதலைப்புலிகளுக்கு உதவியாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்ல. பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் இந்தியா அதைக்கண்டும் காணாமல் விட்டுவிட்டதே, கைவிட்டு விட்டதே என்ற வேதனையில்தான்.
ஈழத்தமிழர்களின் இந்தக்கோபம் இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல என்ற கருத்து பரவிக்கிடக்கிறது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் ஆழவேரூன்றிவிட்ட இந்த எண்ணத்தை துடைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போட்டது என்பதில் ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி, உலக நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சமுதாயத்தினர் மத்தியிலும் சரி யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக இவர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழர்களை அழித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்காக கோபத்துடனும் உள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை இந்தியத் தரப்பிலிருந்து கடுமையாக யாரும் கண்டிக்காததும் அதைத் தடுக்க முயலாததும் உலகத்தமிழ் சமுதாயத்தினரை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது.
தமிழர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கெல்லாம் இந்தியாவின் முழு ஆதரவும் இருக்கிறது என்ற எண்ணத்தை ஆணித்தரமாக அவ்வப்போது கோதாபய ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் நிரூபிக்க முயன்றபோது அதைத் தடுக்கவோ மறுக்கவோ இந்தியா முயலவில்லை என்பதும் இந்தியா மீதான உலகத்தமிழர்களின் வருத்தத்திற்கு இன்னொரு காரணம்.
இந்திய அரசும், காங்கிரஸும் இலங்கை இனப்பிரச்சினையில் நடந்துகொண்ட விதத்தால் தான் இன்று ஈழத்தமிழர்கள் சோனியா காந்தி மீது கோபமாக இருக்க முக்கிய காரணம்.
இந்தக் கோபம்தான் இப்போது விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் ரூபத்தில் கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளின் கருத்தாக இணையத்தளத்தில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகள்,செய்திகள்,ஆய்வுசெய்திகள் மூலம் உலா வந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக சோனியா காந்தியை தமிழர் விரோத சக்தியாகச் சித்திரித்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேபோல், முதல்வர் கருணாநிதியையும் தமிழர் விரோத சக்தியாக மாற்றி வருகின்றனர்.
சோனியா காந்தியும்,கருணாநிதியும் தமிழர்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்காமல் அழியவிட்டுவிட்டதாக கடும் கோபத்துடன் உள்ளது ஈழத்தமிழ் சமுதாயம்.
அதேபோல், விடுதலைப்புலிகளும் கூட லெபனான் மீது இஸ்ரேல் 2006 ஆம் ஆண்டு கடும் தாக்குதல் நடத்தியபோது உலக சமுதாயம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அடக்கியது போல இப்போதும் உலக சமுதாயம் இலங்கையைக் கட்டுப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அது பொய்த்துப் போய்விட்டது. பக்கத்தில் இருக்கும் இந்தியாவே அமைதியாக இருந்ததால் உலக சமுதாயமும் ஒப்புக்கு சில கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டு அமைதியாகிவிட்டது.
அதேசமயம், விடுதலைப்புலிகள் இயக்கம் அப்பாவி மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்துவதாக வெளியான செய்திகளால் பிரபாகரன் மீதும் புலிகள் இயக்கம் மீதும் எதிர்மறையான கருத்துகள் பரவக் காரணமாகிவிட்டது.
தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸைத் தவிர வேறு எந்த உலக அமைப்பும் விடுதலைப்புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தர முன்வரவில்லை.
இந்தியா இப்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான நாடாக மட்டுமல்லாமல் தமிழ் விரோத நாடாகவும் உலகத்தமிழர்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது, இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல.
இந்திரா காந்தி மீது இன்னும் ஈழத்தமிழர்கள் நன்றியுடன் இருப்பதற்கு அவர் செயல்பட்டவிதமும்,அவர் தமிழர்கள் பால் காட்டிய அன்பும், பரிவும்,பச்சாத்தாபமும் தான் காரணம் என்பதை இந்திய அரசு மறந்து விட்டதாகவே தெரிகிறது.
தமிழர்களின் துயரங்களுக்காகவும்,அவர்கள் இழந்த உரிமைகளைப் பெறவும் இந்திரா காந்தி துடித்தார். ஆனால், தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அப்படியே இந்திராவுக்கு நேர்மாறாக இருப்பதாக ஈழத்தமிழர்கள் கருதுகின்றார்கள்.
தமிழ் மக்களின் துயரத்தைக் கொஞ்சம் கூட பகிர்ந்து கொள்ளவோ, பரிவு காட்டவோ சோனியா முன்வரவில்லை என்பது அவர்களின் ஆழமான வருத்தமாக உள்ளது. இந்த எண்ணத்தை துடைத்து தமிழர்கள் மீது பாசத்துடன்தான் உள்ளோம் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நிரூபிக்க வேண்டும்.
அதற்கு இலங்கையை நிர்பந்தப்படுத்தி தமிழர்களுக்கும் சமஉரிமை,சம அந்தஸ்து,கௌரவமான,அமைதியான வாழ்க்கையைப் பெற்றுத் தர இந்தியா முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும்.அது மட்டும்தான் இந்தியா மீதான அவப்பெயரைத் துடைக்க ஒரே வழி.