21.12.2008.
இலங்கைப் பிரச்சினையில் ஆரிய கருத்தியலாளர்களின் செல்வாக்கே டில்லியில் மேலோங்கிக் காணப்படுகின்றது. உண்மையான திராவிட பாரம்பரியம் மீண்டும் தோன்றினால் மாத்திரமே விடுதலை ஏற்படும். அது நிகழ்ந்தே தீரும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி க. விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மருதானை சமூக, சமய நிலையத்தில் மாணவ ஜீவன் எழுதிய விடிவை நோக்கி நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
இந்த நாட்டில் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் திராவிட மக்கள் பிரிவின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மாணவ ஜீவன் இந்நூலை வெளியிட்டுள்ளார்.
திராவிட மக்களுக்கு எதிராக ஆரியரின் ஒடுக்குமுறைகள் இன்று நேற்றல்ல. 3500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஒன்றாகும். உண்மையில் திராவிட பாரம்பரியம் மிகவும் மனித பண்பாடு கொண்ட நாகரிகமாகும். தாய்க்கு முக்கியத்துவம் வழங்கும் இவ்வாறான பாரம்பரியத்தை இந்த நாகரிகம் கொண்டிருந்தது.
ஆரிய நாகரிகம் மந்தை மேய்ப்பை அடிப்படையாகக் கொண்டு காட்டு மிராண்டித் தன்மையுடைய நாகரிகமாகும். இந்த நாகரிக முறை ஆதிக்கம் பெற்றதுடன், தாய்வழிமுறை இல்லாமல் போனது. கூட்டு வாழ்க்கை சிதறடிக்கப்பட்டது. அமைதியான வாழ்வியல் முறைக்குப் பதிலாக ஆயுத கலாசாரம் மேலோங்கியது.
ஆண் மேலாதிக்க சமூக முறையும் அதாவது தந்தை வழி சமுதாய நிலையும் அதிகாரிகளின் தோற்றமும் ஆரம்பமாகிறது. அடிமை முறை தோற்றமெடுத்தது. முதலில் பெண்களே அடிமைப்படுத்தப்பட்டனர். சுரண்டல் முறையுடன் கூடிய அடிமை முறைமை தோற்றம் பெற்றது.
ஆங்கிலேய நாகரிகம் ஆரிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எமது தேசத்தில் 500 ஆண்டுகளாக அதை நாம் நேரில் பார்த்துள்ளோம். ஆரிய நாகரிகத்திற்கும் திராவிட நாகரிகத்திற்கும் இடையேயான முரண்பாடுகள் இன்று வரை தொடர்கிறது. இன்று கிளிநொச்சியில் மக்களைக் கொன்றழிக்கும் முயற்சிகளுக்கும் ஆரிய பாரம்பரியத்தின் முகவர்களின் ஆசீர்வாதம் கிடைத்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற்றார். ஆரிய முறைமையை மக்கள் நிராகரித்திருப்பது தெளிவுபடுத்தப்படுகிறது. கறுப்பினத்தவரை அமெரிக்க மக்கள் தெரிவுசெய்திருப்பதுடன், அவருக்கு உதவியாக பெண் ஒருவரும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். இது ஆரிய பாரம்பரியத்துக்கு எதிரான நிலையாகும். எல்லா பாவங்களையும் புரிந்துவிட்டு இறுதியில் கடவுளின் செயலென்று கூறும் ஆரிய மாயை முடிவுக்கு வருகிறது. உலகம் புதிய ஒழுங்கை நோக்கி பயணிக்கப் போகிறது.
ஆரியரின் நிலைப்பாடுகளுக்கு எதிராக முதன்முதலில் கௌதம புத்தரே புரட்சி செய்தார். இதன் பின்னர் ஈ.வெ.ரா. பெரியார் பெரும் பங்காற்றியுள்ளார். இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. இலங்கை பிரச்சினையில் ஆரிய கருத்தியலாளர்களின் செல்வாக்கே டில்லியில் மேலோங்கியுள்ளது. உண்மையான திராவிட பாரம்பரியம் மீண்டும் தோன்றினால் மட்டும் விடுதலை ஏற்படும். அது நிகழ்ந்தே தீரும்.
கலாநிதி விக்கிரபாகு கருணாரத்தின எங்கு கல்வி கற்றார் ?
எங்கிருந்து இடதுசாரிகருத்தைப் பெற்றார் ?
இலங்கை-இந்தியாவில்லுள்ள தொழிலாளரும் விவசாயி எல்லோரும்
முட்டாள்கள் என நினைக்கிறாரா ?அல்லது வை.கோ நெடுமாறன் சுப.வீரபாண்டியனுக்கு
தான் எந்த விதத்திலும் குறைபடாதவன் என நிரூபிக்கிறார்ரா ?
அல்ல அன்னியமாயையில் சிக்கிபுலியை வளர்த்துவிட்டு
இந்தியாவை துண்டாட நினைக்கிறார்ரா ?
வாசகர்களே ! இவரின் பேச்சில் எங்கேயாவது ஒரு இடதுசாரிக் கருத்தை காணமுடியுமா ?
இவர் அப்பட்டமான பிரிவினைவாதியில்லையா ? தயவுசெய்து பதில்சொல்லுங்கள்
எனக்கு மூளைமழுங்கிவிட்டதா? கலாநிதி விக்கிரபாகு கருணாரத்தினாவுக்கு மழுங்கிவிட்டதா ?