இலங்கையில் ‘புதிய அமைச்சரவை”, ‘2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்” ஆகிய இரு விடயங்கள் முக்கியமாய் அமைந்திருக்கின்றன. புதிய அமைச்சரைவயில் 10 சிரேஷ்ட அமைச்சர்களும், 50 அமைச்சரவை அமைச்சர்களும், 31 பிரதி அமைச்சர்களும் கொண்ட புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இணக்க அரசியல் பேசி வருகிற டக்ளஸ் தேவானந்தாவிற்கு மாற்றமின்றி பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள முரளிதரனுக்கு(கருணா) மீள்குடியேற்ற பிரதி அமைச்சும் கிடைத்திருக்கிறது. பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி தன் பொறுப்பிலேயே வைத்திருக்கிறார்.
பிரமதராக தி.மு.ஜயரட்ணவே நியமனம் பெற்றிருக்கிறார். பொருளதார அபிவிருத்தி அமைச்சராக பசில்ராஜபக்ஷவே நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சராக எஸ.பி. திஸாநாயக்கவே நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டமைச்சராக ஜி.எல்.பீரிஸ், பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. புதிதாக சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வாசுதேவ நாணயக்காரவிற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. ஆக நிறைவேறற்திகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர், 10 சிரேஷ்ட அமைச்சர்கள்; 50 அமைச்சரவை அமைச்சர்கள்;, 31 பிரதி அமைச்சர்கள் கொண்ட ஒரு மத்திய அதிகார மையம் நிறுவப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் புதிய வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சம்hப்பித்து உரையினை நிகழ்தியிருந்தார். அவரது உரையில் சில முக்கிய பகுதிகள்.. 2010 ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை அறிமுகப்படுத்திய போது முதலாவது பதவிக்காலத்தில் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமாதானத்தை பெற்றுக் கொள்ளப்பட்டதனை நினைவூட்டினேன்.
மக்களுக்குத் தேவையானதெல்லாம் மரியாதையான வாழ்க்கை, சுத்தமான சுற்றாடல், அவர்களின் பிள்ளைகளுகளுக்கான சிறந்த வாழ்க்கை பதவியேற்ற போது பிரிவினைவாதம், சமூகவாதம், வெளிநாட்டு;த் தலையீடுகள் என்பவற்றினால் நாடு சூழப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பிரிவினை வாதம் தலைதூக்குவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லை. இராணுவத்தினர் மிலேச்சத்ததனமான எல்.ரி.ரி.ஈ. பயங்கராவாதத்திலிருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் பங்கு கொண்டனர். பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரி விடயங்களைக் கவனிக்க 3 வருட காலப்பகுதிக்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடு செய்கிறேன். இராணுவப்படைவீரர்களது குடும்ப சூழ்நிலையினை மேம்படுத்துவதற்காக குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்காக குடும்பமொன்றிற்கு 100.000 இனை கொடுப்பனவாக வழங்குதவற்கு நான் முன்மொழிகின்றேன். வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அபிவிருத்திக்காக பாரியளவிலான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாக உள்ளது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் 2012 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சிறந்த வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்திய பிரதமரினால் 50000 வீடுகள் கட்டுவதற்கு உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் அரசாங்கம் 80000 வீடுகளை புனரமைப்பதற்கு கொடை வழங்கும் முகவராண்மைகள், நட்பு நாடுகள் மற்றும் சொந்த வரவு செலவுத் திட்ட வளங்களினைக் கொண்டு நிதியினை(ஒதுக்கப்படவில்லை) திரட்டப்படும். ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு உரையில், வடக்கு கிழக்கு யுத்த அழிவுகளில் வாழும் மக்கள் குறித்து பேசப்படாமையும் , அவ்வழிவுகளிலிருந்து மீள்வதற்கான குறிப்பான திட்ட முன்மொழிவுகள் எதனையும் குறிப்பிடாமையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக இது அமையவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்கள். இவ்விடயம் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்களும் கவனத்தில் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் முனவைக்கப்படவில்லை. அரச உழியர்களுக்கான சம்பள உயர்வு முன்னர் கூறியது போன்று அமையவில்லை. அபிவிருத்தியா? மக்களுக்கான நிவாரணமா? எனும் இரண்டில் தாம் அபிவிருத்தியை இலக்காக்கியுள்ளதக ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இராணுவம் மற்றும் உயர் குழாத்தினருக்கான சலுகைகைள் வழங்கப்பட்டிருகின்றன. நாடு அபிவிருத்தியைடயும் போது எதிர்காலத்தில் மக்கள் நலன் பெறுவார்கள் எனக்கூறப்படுகிறது. ஆனால் அது எவ்வாறு என எவரும் கூற மாட்டார்கள். சிங்கள – தமிழ் – இஸ்லாமிய மக்கள் தொடர்ந்தும் வயிற்றைக் கட்டி வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கில் அவலங்குள்ளாகியுள்ள மக்களின் நிவாரணப்பணிகள் மட்டுமன்றி, நாடாளவிய ரிதியில் பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களும் கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடையட்டும். பாலும் தேனும் தரலாம் என்ற பாராளுமன்ற வாதிகளின் வார்த்தைகள் பொய்த்திருப்பதை மக்கள் இப்போது உணரத்தொடங்கியிருக்கிறார்கள். யுத்தம் இலங்கையில் வாழும் சாதாரண மக்களுக்கு சிறப்பான நன்மைகளையும் செய்யவில்லை. வட-கிழக்கு தமிழ் மக்கள் அழிவுகள் – அவலங்களைச் சந்தித்தக் நேரிட்டது. தெற்கில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் மரணங்கள் – அங்கவீனமாக்கப்பட்டமை என்பவற்றுடன் யுத்த செலவினத்திற்கான முழுப்பொறுப்பினையும் ஏற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மக்கள் எதிர்த்துப் போராடி தாம் வாழ்வதற்கான உரிமைகளைப் பெற முயல்வார்களா? சுயநலமின்றி மக்கள் நலனை மனதில் கொண்டு போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய சக்திகள் உண்டா? என்ற கேள்விக்கான பதிலில்தான் இலங்கை மக்களின் சிறப்பான எதிர்கால வாழ்வு தங்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.