17.03.2009.
இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்வதேசம் கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் தோன்றியுள்ளன.
குறிப்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கின்டன் தொலைபேசி மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு பேயிருந்தமை மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சர்வதேச சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளது எனக் கூறியிருந்தமை போன்றன சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பறைசாற்றுகின்றன.
எனினும், சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமும், அரசாங்க ஊடகங்களும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், சர்வதேசம் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொடர்புகொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மாத்திரமே வலியுறுத்திக் கூறியதாக இலங்கை அரசாங்கம் தகவல்களை வெளியிட்டது. எனினும், இலங்கையில் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதேசங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக ஹிலாரி கவனம் செலுத்தியதாக அமெரிக்க வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேநேரம், இலங்கை நிலைமை தொடர்பாக இதுவரை கருத்துத் தெரிவிக்காதிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டு தரப்பும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
“இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் மேற்கொண்டுவரும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள், மனிதபிமானச் சட்டம் என்பவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளன. என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நிலைமையானது முற்று முழுதாக கவலையளிப்பது என்பதே போதியளவுக்கு நாம் அறிந்துள்ளோம். இந்த மாதிரியான நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்பாக இன்று உலகம் உணர்ந்துள்ளது” என நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
பாதுகாப்பு வலயம் என அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், வன்னியில் இதுவரை 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததார்.
எனினும், நவநீதம் பிள்ளையின் குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வன்னியில் 2,800 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுப்படுவதில் உண்மை இல்லையெனவும் கூறியிருந்தார்.
இலங்கை தொடர்பாக சர்வதேசம் கொண்டிருந்த நிலைமை மாற்றமைந்திருக்கும் சூழ்நிலையில் அதனை மாற்றுவதற்கு அல்லது அதனைத் தடுப்பதற்கு இலங்கைத் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாட்டு உதவிகளை மறுத்த இலங்கை
இலங்கை விடயத்தில் சர்வதேசம் அக்கறை செலுத்தியுள்ள நிலையில் வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவி வழங்க அமெரிக்கா முன்வந்திருந்தது. இதனை இலங்கை அரசாங்கம் நாசூக்காக மறுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய நிழல் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்சைச் சந்தித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்த விடயம் தொடர்பாகக் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.
தற்போது ஏனையோரின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் இருப்பதுடன், வடக்கை மீட்ட பின்னர், அந்தப் பகுதிக்கான அரசியல்க்கட்டமைப்பு அடுத்த 3 மாதங்களுக்குள் முன்வைக்கப்படவேண்டிய தேவையிருப்பதாக போகல்லாகம அவரிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.