அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தலையீட்டில் நடத்தப்பட்ட தேர்தல் மகிந்த ராஜபக்சவிற்குப் பதிலாக மைத்திரிபல சிரிசேன என்ற மகிந்த சிந்தனையில் புடம் போட்ட பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சி மைத்திரி அணியின் கூட்டுக்கட்சி. வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையாக வாக்களித்த தமிழர்கள் ஜாதிக ஹெல உறுமையவிற்கும் சேர்தே வாக்களித்துள்ளனர்,
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு மக்களை நகர்த்திவந்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(தமிழரசுக் கட்சி). தமிழ்த் தேசிய மக்கள் முனனணி(அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), புலம்பெயர் தேசிய வியாபார அமைப்புக்கள் போன்றவையும் காரணமாகவிருந்தன.
மக்களை மந்தைகளாக்கிப் பிழைப்பு நடத்தும் இக் கும்பல்கள் ஜனாதிபதித் தேர்தல் அனுபவத்தை முன்வைத்து அரசியல் நீக்கம் செய்யப்படாவிட்டால் தேர்தல் முடிவுகளின் அழிவுகளோடு ஆரம்பமாகும் அழிவுகளின் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசிய இனங்கள் அழிக்கப்படும்.
எதற்கெடுத்தாலும் தமிழினம் என்று கூச்சலிடும் இக்கும்பல்கள் தமிழர்கள் மத்தியிலுள்ள பிழைப்புவாத அதிகாரவர்க்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தினர். தமிழர்கள் மத்தியிலுள்ள பிழைப்புவாதிகளையே இவர்கள் தமிழினம் என்று அழைத்தனர்.
உழைக்கும் மக்களின் தலைமையிலேயே உலகம் முழுவதும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிபெற்றன. பிழைப்புவாதிகளின் தலைமையில் அல்ல! அதனால் தான் ஜாதிக ஹெல உறுமைய என்ற சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்பிற்கு வாக்களிக்கும் நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.
இலங்கையை ஒட்டச் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்ட மேற்கு ஏகாதிபத்தியங்களதும் இந்தியாவினதும் கோரப்பிடியில் முழு இலங்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனக்கொலையாளி மகிந்தவிற்குப் பதிலாக இனக்கொலையை நடத்திய ஏகாதிபத்தியங்களின் அடியாளான மைத்திரி ஆட்சிப் பொறுப்பில் ஏறவுள்ளார்.
எது எவ்வாறாயினும் பிழைப்புவாத அரசியல் தலைமைகள் இன்று நிர்வாணமக நிற்கின்றன. இவற்றை நிராகரித்து புதிய அரசியல் திட்டம் முன்வைக்கப்பட்டு புதிய அரசியல் தலைமை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் தோன்ற வேண்டும்.
இலங்கையைச் சூறையாடிய மகிந்த குடும்பம் புதியவர்களிடம் ஒப்படைக்கபடப் போகிறது. இதன் போதான வன்முறையும் அழிவும் மற்றொரு இராணுவப் பயங்கரவாதத்தை முன்னறிவிக்கிறது.








