ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான உறவு காரணமாக, இஸ்ரேலிய இராணுவ தொழிற்சாலையிலிருந்து இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பங்களும், ஆயுத தளபாடங்களும் ஏற்றுமதி செய்யப்படுவது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஈரான் தற்போது இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறையில் பிரதான முதலீட்டாளராக மாறியுள்ளதாகவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்துடனான உறவை மறைக்க முடியவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கும் புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் குறித்து இலங்கையிடமிருந்து ஈரான் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் என இஸ்ரேல் அஞ்சுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேல் நீண்ட காலமாக இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பங்களை விநியோகிக்கும் முக்கிய நாடாக இருந்துவருகிறது. வருடாந்தம் இரு நாடுகளுக்குமிடையிலும் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இராணுவ கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெறுகின்றன. இஸ்ரேல் இலங்கைக்கு கிபீர் விமானம், புதிய கடற்படை உபகரணங்கள், ஆளில்லா விமானம், எறிகணை கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவத் தளபாடங்களை விநியோகித்துள்ளது” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இலங்கைக்கான இராணுவத் தளபாட விநியோகத்தை உத்தியோகபூர்வமாக நிறுத்தியுள்ளபோதும், ஏற்கனவே விநியோகித்துள்ள இராணுவத் தளபாடங்களுக்கான உதிரிப் பாகங்களை தொடர்ந்தும் வழங்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் மிக நவீன இராணுவ தளபாடங்களை தொடர்ந்தும் தடையின்றி இலங்கைக்கு விநியோகிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் 2004 ஆம் ஆண்டு முதல் நெருக்கமான உறவுகள் தொடர்ந்துவருகின்றன. ஈரான் இலங்கையின் பொருளாதாரத் துறையில் சுமார் அரை பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதது.