04.01.2009.
பரந்தன், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, பரந்தனுக்குத் தெற்காக ஆனையிறவை நோக்கி முன்னேறும் இலங்கை இராணுவத்தினரைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்று, கள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றியபோதே, கிளிநொச்சி, ஆனையிறவு, மற்றும் அதற்கு வடக்கேயுள்ள பளை, முகமாலை வரையிலான பிரதேசங்களை வெற்றிகொள்ளும் நிலைக்கு இராணுவத்தினர் வந்துவிட்டனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது புலிகளின் பிரதான தளங்களும், களஞ்சியங்களும் கிளிநொச்சிக்குக் கிழக்கே தர்மபுரம் முதல் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வரையிலான பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன.
இந்தப் பகுதியிலிருந்து கிளிநொச்சி, ஆனையிறவு, முகமாலை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக பரந்தன் – முல்லைத்தீவு வீதி மட்டுமே உள்ளது.
இராணுவத்தினர் பரந்தன் சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டிருப்பதால், கிளிநொச்சிக்குக் கிழக்கேயுள்ள புலிகளின் பிரதான தளங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கான விநியோகம் முற்றாகத் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டாவளை, சுண்டிக்குளம் உள்ளிட்ட பிரதேசங்களினூடாக ஆனையிறவு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களுக்குச் செல்வதற்கான பாதைகள் இருந்தாலும், அவை ஒரு போர்ச்சூழலில் அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு உகந்தவை அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதான விநியோக மார்க்கத்தை இழந்துள்ள நிலையில், பரந்தனலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறும் படையினரைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடுவது புலிகளுக்குச் சிரமமான காரியம் என்று, கள யதார்த்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால், பரந்தனிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறும் படையினர், ஆனையிறவை விரைவில் கைப்பற்றி, தொடர்ந்து, யாழ்ப்பாணத்துக்கும், வன்னிக்கும் இடையிலான பிரதான எல்லைப் பகுதியாக இருந்து வந்த முகமாலை வரையிலான பிரதேசங்களையும் கைப்பற்றும் சாத்தியங்கள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
2000ம் ஆண்டு, இலகுவில் வீழ்த்த முடியாத தளம் என்று கருதப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துடன் ஒரு படைவலுச் சமநிலையை ஏற்படுத்தியிருந்தனர்.
இதுவே, பின்னர் 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுவதற்கும் அடிப்படையாக இருந்தது.
இந்த நிலையில். ஆனையிறவுத் தளம் மீண்டும் படையினர் வசம் வீழுமாக இருந்தால், அது புலிகளுக்கு கிளிநொச்சி இழப்பைவிட ஒரு மிகப்பெரும் பின்னடைவாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புலிகள் ஓர் விடுதலை இயக்கமாக இருந்திருக்குமேயானால். இன்றைய இவ்விழப்புக்களை சந்தித்திருத்தவே முடியாது! சுத்த ராணுவக் கண்ணேட்டத்திலான போர்? எதிரிக்கும் நண்பனுக்கும் வித்தியாசம்தெரியாத போக்கு. குறுந்தேசிய இனவெறியிலான நடவடிக்கைகள் கொலைகள் போன்றனவைகளே புலியின் வீழ்ச்சிக்கான பிரதான காரணிகள்!