19.11.2008.
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வலியுறுத்தியிருக்கிறது.
பருவ மழை தொடங்கும் நிலையில், குறைந்தது 20,000 குடும்பங்களாவது மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறைவிடம் இன்றி இருப்பதாக அது கூறியிருக்கிறது.
புலிகள் மீதும் கண்டனம்.
வன்னிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முகாம்களில் தற்போது வாழ்ந்துவருவதாகவும், விடுதலைப்புலிகள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் ஒரு கடுமையான அனுமதி முறையை அமல்படுத்தியிருப்பதாகவும் அம்னெஸ்டி கூறியிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் இந்த நடைமுறைகள், அரசு படைகளுக்கு எதிராக சிவிலியன் மக்களை ஒரு பாதுகாப்பு அரணாக வேண்டுமென்றே பயன்படுத்தும் நோக்கிலானவை போல் தோன்றுவதாக அது கூறியிருக்கிறது.
இந்திய அரசு அனுப்பியுள்ள உணவுப்பொருட்கள் அரசு சாரா நிறுவனங்களின் உதவியின்றி , உதவி மிக அதிகமாகத் தேவைப்படும் மக்களைச் சென்றடைகிறது என்று உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் அம்னெஸ்டி, வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் தேவைகளைப் பற்றி கணிப்பீடு செய்து , அங்கு உணவு மற்றும் பிற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, இலங்கை அரசும் , விடுதலைப்புலிகள் இயக்கமும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.
BBC.