இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே தெரிவித்துள்ளார்.
இது இலங்கை அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், தன்னையே இவ்வாறு நடத்துவார்கள் என்றால்,வெளியில் கருத்துத் தெரி விக்க முடியாதவர்களை பகிரங்க அறிக் கைகள் விட முடியாதவர்களைஎவ்வாறு நடத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இது தொடர்பாக பொப் ரே எம்.பி. மேலும் தெரிவித்தவை வருமாறு:
ஜூன் 9 ஆம் திகதி மாலை டில்லியிலி ருந்து விமானம் மூலம் நான் கொழும்புக் குச் சென்றேன். இலங்கைத் தூதரகத்திடம் நான் விஸா பெற்றுள்ளதுடன்,இலங்கைக்கான கனடா தூதுவருடன் எனது விஜயம் குறித்து ஆராய்ந்திருந்தேன். வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளுடனும் இலங்கை அதிகாரிகளுடனும் அது குறித்து ஆராய்ந்தேன்.
கனடா தூதரக அதிகாரிகள் இருவருடன் நான் குடிவரவு பிரிவிற்குச் சென்றவேளை, சிறிது தாமதத்தின் பின்னர் தேசிய புலனாய்வு அரசுப் பிரிவில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.
இதற்கான காரணம் என்னவென்பதைக் கண்டு பிடிப்பதற்காக விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்களை செலவிட்டேன். ஒட்டாவா மற்றும் இலங்கையிலுள்ள கனடா அதிகாரிகள் எனக்கு முழு உதவியளித்தனர்.
இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன் என்னை லண்டன் விமானத்தில் திருப்பியனுப்பியது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு எனது பயணம் குறித்து தனக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்து விட்டது.
தாம் தயாரித்த அறிக்கையில் கையொப்பம் இடுமாறுகேட்டனர்
எனினும், இலங்கை இராணுவமும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நபர் என முட்டாள்தனமான கருத்தை முன்வைத்துள்ளனர்.
இலங்கை நிலைவரம் குறித்து உண்மையான விவரங்களை அறியாமல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன், இதற்காக வருந்துகிறேன் என அறிக்கையொன்றில் கையெழுத்திடுமாறு கேட்டனர். நான் மறுத்து விட்டேன்.
இலங்கை விடயத்தில் ஒரு தசாப்த காலமாக நான் தொடர்புபட்டுள்ளேன். அந்தநாடு முழுவதிலும் பயணம் செய்துள்ளேன். அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்துள்ளேன்.
சமாதானப்பேச்சுக் காலத்தில் அதில் தொடர்புபட்டிருந்த விடுதலைப்புலிகளின் அதிகாரிகளைச் சந்தித்துள்ளேன்.
பரந்துபட்ட கருத்துகளை உடைய பல அரசியல் கட்சிகளை நான் சந்தித்துள்ளேன்.
இலங்கை விஜயங்களின் போதும், கனடாவிலும், சமாதான தீர்விற்காக முயன்றுள்ளேன். இதற்காக அனைத்து வகையான கருத்துகளைக் கொண்டவர்களையும் நான் சந்தித்துள்ளேன்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லன்
விடுதலைப்புலிகளின் வன்முறை தந்திரோபாயங்கள் சரியானவை என ஒரு போதும் நான் கருதியதில்லை. பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற விவாதங்களில் கூட இதனைத் தெரிவித்துள்ளேன்.
இலங்கை இராணுவப் பேச்சாளர் கூறுவது போல நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்பது பொய்.
எனது கடந்த கால செயற்பாடுகள் நான் மிதவாத தமிழ் மற்றும் மாற்றுக் கருத்துகளுக்கு ஆதரவாக செயற்பட்டதைப் புலப்படுத்தும்.விடுதலைப்புலிகளின் தந்திரோபாயங்களின் ஒரு பகுதியான மனித உரிமை மீறல்களை நான் தொடர்ச்சியாகக் கண்டித்து வந்துள்ளேன். கனடாவிலும், வெளிநாட்டிலும் தயக்கமின்றி கருத்துத் தெரிவித்து வந்துள்ளேன்.
முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் சமாதான செயலகத்தைச் சேர்ந்த கேதீஸ் லோகநாதன் ஆகியோரின் நினைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றி யுள்ளளேன்.இருவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள்.