27 – July – 2008
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் கொழும்பில் மாத்திரம் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடிவிட்டு தமது கருத்துக்களை கூறியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவின் தலைவர் ரொபேட் இமாம்ஸ் மறுத்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை சார்க் கூட்டத் தொடர் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்த கருத்தினையே இமாம்ஸ் மறுத்துள்ளார்.
பி.பி.சி.வானொலி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் பரந்துபட்ட அளவில் பலருடன் பேசிய பின்னர் தான் இந்த முடிவுக்கு வந்தோம். அரச தரப்பினர், அரசியல் கட்சிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களென பலருடன் பேசியே இறுதி முடிவுக்கு வந்தோம்.
இது குறித்து இலங்கை அரசை விமர்சித்தது உண்மை தான். ஆனால் எமது விமர்சனம் நட்பு ரீதியானதும் ஆதரவுப் போக்கிலானதும் ஆகும். இலங்கையுடனான விமர்சனங்களை நட்புரீதியாகவே நோக்க விரும்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.