அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டு, வெலிக்கந்தை தடுப்பு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 30ம் நாள் கைது செய்யப்பட்ட சண்முகம் சொலமன், வி.பவானந்தன் ஆகியோர் இன்று வவுனியாவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவின் முகாமில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில், இவர்கள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரு மாணவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவர் என்ற விபரமும் வெளியிடப்படவில்லை.