இலங்கையை பூர்வீகமாக கொண்ட மலேசிய செல்வந்தரான ரி. அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள் ஆழமாக வேரூன்றுகிறார்.தொலைக்காட்சி மற்றும் கையடக்க தொலைபேசித்துறையில் இருக்கும் தனது ஆர்வத்துடன் வானொலி கட்டமைப்பை அதிகரிக்கும் மலேசிய செல்வந்தருமான அனந்த கிருஷ்ணன் இந்திய சந்தைக்குள்ளும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இந்தியா பூராவும் 40 எம்.எம். வானொலி நிலையங்களை நடத்தும் சன் எவ்.எம். வானொலி கட்டமைப்பில் 7 சதவீதமாக இருந்த தனது பங்கை ஆகஸ்ட் 4 இல் 20 சதவீதமாக அனந்த கிருஷ்ணனின் “அஸ்ரோ ஆல் ஆசியா நெற்வேர்க்ஸ்’ நிறுவனம் அதிகரித்துள்ளது. சன் எவ்.எம்.மின் உரிமையாளர் இந்திய செல்வந்தர்களில் ஒருவரும் சென்னையை தளமாக கொண்ட ஊடக பெரும்புள்ளியுமான கலாநிதி மாறனாகும். அவரின் சன் ரி.வி. கட்டமைப்பானது தென்னிந்தியாவில் பாரியளவு நேயர்களை கொண்டதாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சேவைகளை நடத்துகிறது. மாறனின் சன் நேரடி தொலைக்காட்சி சேவையில் ஏற்கெனவே அஸ்ரோ 20 சதவீத உரிமத்தை கொண்டுள்ளது. ஆசியா முழுவதுமுள்ள ஊடக நிறுவனங்களின் முன்னுரிமை பங்காளியாக வருவதை அஸ்ரோ நோக்கமாக கொண்டுள்ளதாக அஸ்ரோவின் ஆகஸ்டில் இடம்பெற்ற வருடாந்தக் கூட்டத்தில் கோலாலம்பூரில் வைத்து அந்நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கிரான்ட் பேர்குசன் தெரிவித்தார். தென்னிந்தியாவில் அனந்த கிருஷ்ணன் நீண்டகாலமாக ஆர்வம்காட்டி வந்தவராகும். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான அனந்த கிருஷ்ணனின் பாட்டனார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்த காலத்தில் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்தவராகும். 1938 இல் கோலாலம்பூரில் பிறந்த அனந்த கிருஷ்ணன் அஸ்ரோ ஆல் ஏசியா நெற்வேர்க்ஸ், மீஸ்ற் குளோபல், மாக்ஸிஸ் கொமியூனிக்கேசன்ஸ் உட்பட நிறுவனங்கள் பலவற்றின் உரிமையாளராகும். மலேசியாவின் இரண்டாவது செல்வந்தரென போப்ஸ் சஞ்சிகையால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தவராகும் என்று “த அவுஸ்திரேலியன்’ பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
|