வெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது நமது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது.
இந்தியத் தூதராக கோபால் காந்தி பொறுப்பேற்கும் வரை அதன் செயல்பாடுகள் இந்தியப் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ஓரளவு வெளிப்படையாகத்தான் இருந்து வந்தது. சிவசங்கர மேனன் தூதராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. செய்திகளை அளிக்கும்போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்வார்.
கோபால் காந்தி சிறப்பாக உபசரித்தாலும், தகவல்களை ஓரளவுதான் கூறுவார். ஆனால், தில்லியில் இருந்து அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்தால் தகவல் நிச்சயமாகத் தெரிவிக்கப்படும்.
நிருபமா ராவ் தூதரான பின்தான் நிலைமை மோசமடையத் தொடங்கியது. பாராட்டி செய்திகளை வெளியிட்டால் அவர் விரும்புவார்.
எந்த அளவுக்கு உண்மையாக இருந்தாலும் தூதரகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து எழுதினால் அதை விரும்பமாட்டார். இதன் காரணமாக இந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களுடனான அவரது உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது.
தூதரகத்தின் ஊதுகுழலாகவே இந்திய பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.
அலோக் பிரசாத் தூதராகப் பொறுப்பேற்ற பின்னர் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதோ அல்லது கலந்துரையாடுவதோ இல்லை. மாறாக, வெளிப்படையாகவே அவர் பத்திரிகையாளர்களிடம் வெறுப்பை உமிழ்ந்தார்.
இலங்கையில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வந்த செய்திகளை தூதரகம் முழுமையாக மறைத்துவிட்டது.
வடக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இரண்டு இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் அவை மூடி மறைக்கப்பட்டுவிட்டன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியா கட்டிய 2 மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பலரும் பாராட்டும் வகையில் அற்புதமாகப் பணிபுரிந்தனர். ஆனால், எந்த ஓர் இந்திய பத்திரிகையாளரும் அந்தப் பகுதிக்குச் செல்லவோ, அவர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் கொண்ட குழு அண்மையில் இலங்கை முகாம்களைப் பார்வையிட வந்தது. ஆனால், அவர்களது பயணம் குறித்து எந்தவொரு தகவலும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளக் கூடாது என இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கூறி அனுப்பி உள்ளனர் என்பது எம்.பி.க்களது செயல்பாடுகளில் இருந்து தெரியவந்தது.
(தங்களுக்கு பழக்கமில்லாத, கொழும்புவைச் சேர்ந்த தொலைபேசி எண்ணாக இருந்தால், பேசுவதைத் தவிர்ப்பதற்காக இணைப்பைத் துண்டித்தனர்.)
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் கூட இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் அசோக் காந்தை சந்திக்காமல் இருந்திருந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும்.
மற்ற நாடுகளின் அமைச்சர்களோ, உயர் அதிகாரிகளோ கொழும்பு வந்தால், அந்த நாட்டு தூதரகங்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றன. ஆனால், அதற்கு நேர் மாறாக, இந்தியத் தூதரகம் இதுவரை அப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை.
இந்தியாவின் “பெரிய அண்ணன்’ மனப்பான்மை அல்லது ரகசியத் திட்டம் காரணமாகவே இந்தியத் தூதரகம் இப்படி செயல்படுகிறது என இலங்கை பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
-பி.கே.பாலசந்திரன்-