07.04.2009.
இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள 14 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் ஒரு லட்சம் பேரின் நிலை குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக இலங்கை சென்றுள்ள மனித உரிமைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. பிரதிநிதி வால்டர் கைலின் கூறியுள்ளார்.
ஏற்கனவே பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் கூறிய அவர், விடுதலைப் புலி போராளிகள் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில், பொதுமக்களின் உயிராபத்து அதிகமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இருக்கும் வரை அப்பகுதி மீது அரசு தாக்குதல் நடத்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களை நேரடியாக பார்வையிட்டு வந்துள்ள வால்டர் கைலின், இம்முகாம்களுக்கு மனித நேய உதவி அமைப்புகள் தங்கு தடையின்று அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முகாம்களின் வெளிக்காவல் கடமையில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டு அங்கு பொலிசார் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது 57 ஆயிரம் பேர் இடைத்தங்கல் முகாம்களில் இருப்பதாகவும், இவர்களில் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களையும் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாதவர்களையும் உடனடியாக விடுதலை செய்தால், அது முகாம்களில் இடநெருக்கடியை குறைப்பதுடன், சர்வதேச மனித நேய தரங்களுக்கு அமைந்த செயலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
BBC
பாதுகாப்பு வலயப் பகுதியில் ஷெல் தாக்குதல்கள் நீடிப்பதாகக் குற்றச்சாட்டு; இலங்கை அரசு மறுப்பு
வட இலங்கையில் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அறிவித்துள்ள பகுதியில் இப்போதும் ஷெல் தாக்குதல்கள் தொடரவே செய்வதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜா தெரிவித்துள்ளார்.
இராணுவம் இருக்கும் திசையிலிருந்தே இந்த ஷெல்கள் வந்து விழுவதாக குறிப்பிட்ட டாக்டர் வரதராஜா அவர்கள், கடந்த இருபத்து நான்கு மணி நேரங்களில் மட்டும் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் ஒன்பதும் காயமடைந்தவர்கள் 65 பேரும் புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படுவதை இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகொல்லாகம மறுத்துள்ளார்.
BBC