திங்க ளன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது எழும் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது, இலங்கை அரசு மீது எழும் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.
சிறார்கள் உட்பட ஏராளமான சிவிலியன்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருவதாக செய்திகள் வருவது கண்டு ஐரோப்பிய ஒன்றியம் விரக்தியும் வேதனையும் அடைந்திருப்பதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள எமது செய்தியாளர் கூறுகிறார். பொதுமக்கள் நிறைந்து காணப்பட்ட இடங்களிலும் அரச படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியாகிய தகவல்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் கவலையைத் தந்துள்ளதாக அது கூறுகிறது.