தமிழ்ப் பேசும் மக்கள் மனிதப் பேரழிவை ராஜபக்ச அரசும் அதன் துணைக் குழுக்களும் திட்டமிட்டு நிகழ்த்தும் அவலச் சூழல் தெற்காசியாவின் தென் மூலையில் மக்கள் போராட்டத்திற்கான தேவையை என்றுமில்லாதவாறு உருவாக்கியுள்ளது. தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக பிளவுண்ட நிலையில் பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கான ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக பரிணாமம் பெறும் சாத்தியமான அனைத்து வழிகளையும் சிதைப்பதில் ஏகபோக அரசுகளும் அதன் அடியாட்களும் அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
இனப்படுகொலையை எவ்வாறு திட்டமிட்டு நிகழ்த்துவது என்பதற்கும் படுகொலைகளின் சூத்திரதாரிகள் தப்பித்துக் கொள்வது என்பதற்கும் இலங்கை அரச அதிகாரம் அனைத்து அரச அதிகாரங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. திட்டமிட்ட இனப்படுகொலையை சட்டலைட்டில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அமரிக்க ஐரோப்பிய அரசுகளும், அதன் பின்னணியிக் செயலாற்றிய சீன – இந்திய அதிகாரங்களும் ராஜபக்ச சர்வாதிகாரத்தின் காப்பரண் போன்றே தொழிற்படுகின்றன.
மக்கள் எழுச்சி உருவாகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு சம்பவங்கள் சமாந்தரமாக நிகழ்கின்றன. முதலில் ராஜபக்ச அரசு மிருகத்தின் வெறியோடு மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது. அத்தாக்குதலில் கிறீஸ் பூதங்களோடு துணைக் குழுக்களும் இணைந்து கொள்கின்றன.
இரண்டாவதாக இந்தியாவிலிருந்து ஐரோப்பா ஈறாக அமரிக்கா வரைக்கும் நீங்கள் போராட வேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துகின்றனர். அவர்களோடு ஐரோப்பிய சந்தர்ப்பவாத வியாபாரிகளும் இணைந்துகொள்கின்றனர்.
உறுதியான அரசியல் தலைமையற்ற ஈழத் தமிழர்களின் மக்கள் எழுச்சிகள் இவர்கள் அனைவராலும் சிதைக்கப்பட்டு புதிய தலைமையின் உருவாக்கமும் பிந்தள்ளப்படுகின்றது.
இவ்வாறான அழிவு அரசியல் சக்திகள் இனம் காணப்பட்டு புதிய அரசியல் தலைமை அழிவிலிருந்து கற்றுக்கொண்டு உருவாவதன் ஊடாக மட்டுமே மக்கள் எழுச்சிகளை நிறுவனமயப்படுத்தி வழி நடத்த முடியும்.
சர்வாதிகார, பாசிச சூழலில் புதிய அரசியல் தலைமை எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் பரந்துகிடக்கின்றன.
ரஷ்யப் புரட்சிக்காலத்தில் சார் மன்னனின் சர்வாதிகாரம் ஒன்று கூடலுக்கான உரிமையைக் கூட மறுத்திருந்தது. இவ்வேளையில் மக்களை அணிதிரட்டுவதற்கான அடிப்படைத் தந்திரோபாய வழி முறைகளை மர்க்சிம் கார்க்கியின் தாய் என்ற நாவல் மக்களுக்குச் சொல்லித் தந்தது. ரஷ்யப் புரட்சியில் மக்கள் எழுச்சியை ஒழுங்கமைப்பதற்கான பிரதான பாத்திரத்தைத் தாய் நாவல் வகித்திருந்தது.
பினோஷேயின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் எதிர்த் தரப்பினர் சர்வஜன வாக்கெடுப்ப்பை மக்களை ஒழுங்கமைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
வியட்னாமியப் போராட்டத்தில் புலம்பெயர் தேசங்களிலிருந்து கோ சீ மின் இன் எழுத்துக்கள் மக்களை அணிதிரட்டுவதில் குறித்த பங்கு வகித்திருந்தது.
அரபு நாடுகளில் நிலவிய சர்வாதிகாரங்களை எதிர்கொள்ள இணையத் தளங்களும் சமூக வலைத் தளங்களும் பயன்படுத்தப்பட்டு மக்கள் எழுச்சிகளை உருவாக்கின.
மேற்குறித்த போராட்டங்களின் விளைவுகள் உள்ளடக்கங்கள் என்பன குறித்த வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையும் மக்கள் அணிதிரட்டப்பட்ட வழிகளும் கவனத்திற்கு உரியன.
உலகின் எந்த மூலையில் போராட்டங்கள் அழிக்கப்படும் போதும் அதன் பின்புலத்தில் அமரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளதும் பங்காற்றலைக் காணமுடியும்.
அமரிக்காவின் உளவுத் துறை ஆலோசனை மையம் உலக அரசியலின் எதிர்காலம் குறித்த தனது அறிக்கையில் மக்கள் போராட்டங்களும் புதிய போராட்ட வழிமுறைகளும் இனிவரும் காலங்களில் எவ்வாறு அமையலாம் எனத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. இணையத் தொழில் நுட்பம் ஒழுங்கமைப்பிற்கான கருவியாகப் பயன்படும் என்பதையும், தகவல் தொழில் நுட்பம் “பயங்கரவாதிகளின்” அடிப்படைத் தொடர்பாடலுக்கான திறவு கோலாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் எழுச்சிகள் உருவாகுவதற்கு முன்பதாகவே அவற்றை அழிப்பதற்கான திட்டமிடலை வகுத்துக்கொள்ளும் உலகின் பயங்கரவாத அரசுகள் உருவாக்கிய தொழில் நுட்பம் அவர்களில் அழிவிற்கு எதிரான மக்கள் சாதனங்களாக மாற்றமடையும் என்பதே அறிக்கையின் உட்பொருள்.
இலங்கையின் இன்றைய அவசரத் தேவையான மக்கள் போராட்டங்களுக்கான வெகுஜன அமைப்புக்களும், அதன் பின்பலமாக செயலாற்றவல்ல தலைமறைவு இயக்கங்களும், இவற்றை ஒழுங்கமைக்கும் புரட்சிக் கட்சியும் நீண்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது தவிர்க்கவியலாதது.
அமரிக்கா வருகிறது என்று முள்ளிவாய்க்காலில் பூச்சாண்டி காட்டி மக்களைக் கொல்லபட இன்னொரு காரணமான அரசியல் முகங்களும், அரச துணைக் குழுக்களும், அரசியல் வியாபாரிகளும் அழிக்க முனைகின்ற மக்கள் எழுச்சிகளின் புதிய தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்வதற்கான கற்கைகளையாவது சமூகப் பிரக்ஞையுள்ள சக்திகள் ஆரம்பிக்க வேண்டும்.