தமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்பு முகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களை நாடி வாக்குகள் கேட்டு வேட்பாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இரு கட்சிகளும் தங்களின் சிங்கள பேரினவாத மேலாதிக்க போக்கை இன்று வரை கைவிடத் தயாராய் இல்லை. 50 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு எந்தவொரு தீர்வையும் எட்டமுடியாத நிலையிலேயே இக் கட்சிகள் இருந்து வருகிறார்கள். இலங்கையை மிகவும் மோசமான அரசியல்-பொருளாதார நிலைக்குள் தள்ளிய பொறுப்பு இந்த இரு கட்சிகளையுமே சாரும்.
இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன. மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமது நலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது. ஏற்கனவே ஒற்றைத் தன்மையுடன் செயற்படும் மேற்கு தமிழ் ஊடகங்கள் மற்றும் மேற்கு ஊடகங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கின் அரசியல் நலனுக்காக செயற்பட்டு வருகின்றன. இன்னுமொரு பக்கம் இந்திய அழுத்தம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கூடாக நடந்தவண்ணமே உள்ளது. இலங்கைத் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கெளரவமான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொள்ளாது தமது நலன் சார்ந்தவர்களை ஆட்சியில் இருத்துவதற்கே இவர்கள் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இவற்றை மீறி தமிழ் தேசிய இனத்துக்கான கெளரவமான தீர்வை முன்னிறுத்தி அதற்காய் தொடர்ச்சியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவதே தமிழர்களுக்கான அரசியலாய் இருக்க முடியும்.
50 வருடங்களுக்கு மேலாக இழுபடும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்பதை இத் தேர்தலுக்கான பகிரங்க விவாதத்திற்குரிய பொருளாக தமிழ்த் தலைமைகள் நிறுத்தியிருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு பிரதான கட்சிகளுக்கு அரசியல் அழுத்தத்தை கொடுத்திருக்கவேண்டும். இன்றைய அரசியல் சூழலில் இத் தேர்தலை சிறுபான்மை தேசிய இனங்கள் தம்வயப்படுத்தியிருக்க வேண்டும். சிறுபான்மை தேசிய இனங்களின் ஜனநாயக் கோரிக்கையை முதன்மை பிரச்சினையாக்கியிருக்க வேண்டும். அதன் ஊடாக சிறுபான்மை தேசிய இனங்களின் நலன் சார்ந்த ஒரு பொது அரசியல் போக்கை உருவாக்கியிருக்கவேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காய் குரல் கொடுக்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் அரசியல் அடித்தளத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.
கடந்த 50 வருடகால அரசியல் போராட்டமும், கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டமும் தமிழ் மக்கள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசியல் நிர்ப்பந்தத்தை புரிந்து செயற்படுவதற்கான அரசியல் விவாதத்தையும், அரசியல் அறிவூட்டலையும் ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு அனைத்து அரசியல் அபிலாசை கொண்டவர்களுக்கும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் என்பவற்றின் தலைமைகள் காட்டும் இடத்தில் புள்ளடி போட மட்டுமேயானதாக மட்டுப்படுத்தப்பட்டே வந்துள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சுதந்திரமான விவாத தளத்தையோ, ஆய்வுகளையோ தமிழ் தலைமைகள் ஊக்கப்படுத்தவில்லை. தமிழ் அரசியல் என்பது மேட்டுக்குடிகளினதும், ஆதிக்க சக்திகளிதும் பேரங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் சாதனமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் தன்னுணர்வு கொண்ட ஒரு தமிழ் சமூகம் உருவாவதற்கு இவர்கள் முட்டுக்கட்டை போட்டவண்ணமே வந்துள்ளனர். இந்த நிலைமையே மலையகத் தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளையும் பார்க்கக்கூடியதாய் உள்ளது.
பழிக்கு பழி, பொங்கலுக்கு விடிவு என்னும் கற்பனை அரசியலை தலைமேற் கொண்டு வந்த எமக்கு குறுகியகால பலன்களுக்காய் அடிபணியும் அரசியல் முடிவுகளையே எடுக்கக்கூடியதாய் உள்ளது. இன்றும் தமிழர்கள் அரசியல் அடித்தளமற்று குறுகிய நலன்களுக்கு தம்மை பயன்படுத்தும் தலைமைகளை நம்பி ஏமாறும் நிலை தொடர்கிறது. அதனால்தான் இன்றைய சனாதிபதித் தேர்தலில் தமிழர்கள், தம்மை கொன்றவர்களை ஆதரிக்கும் ஒரு அவல நிலைக்குள் தள்ளி விடப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களுக்கான அரசியல் விதியை தமிழர்கள் நிர்ணயிக்கவும், இலங்கையின் தேசிய இனங்களுக்கான ஜனநாயகத்தை வலியுறுத்தும் அனைத்து தரப்பும் ஒன்றினைந்து செயற்படுடவும் வேண்டிய காலமிது. வெறுமனமே ஒரு சனாதிபதியை தெரிவு செய்வது என்பது இலங்கைத் தமிழ் மக்களின் நோக்கமாயிருக்க முடியாது. இலங்கையின் தேசிய இனங்கள் கெளரவமாக வாழ வழிவகுக்கும் ஒரு தீர்வைத் தரக்கூடிய அரசியல் மாற்றமே தமிழர்களின் நோக்கமாய் இருக்கவேண்டும். அத்தகைய மாற்றத்தை இலங்கை அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் களத்தை உருவாக்குவதில் தமிழ் தலைமைகளும், தமிழ் மக்களும் உன்னிப்பாய் செயற்படவேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சனநாயக வழிமுறையாய் அமையும்.
தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ, கனடா
சனவரி 14, 2010
தொலைபேசி: 416 840 7335
அதிக பிரசங்கித்தனம் புலம் பெயர்ந்த மண்ணீல்.அதிகநால் வாழ்வோமோ என்ர் ஏக்கம் தாயக மண்ணீல்.என்ன பாவம் செய்தார்கலோ எல்லோரும் புலம்புகிரார்கல்.உருப்படியாக் எதையாவது செய்துநமது மக்கலுக்கு வெலிச்சம் காட்டுங்கல்.கதைத்துக் கொண்டும்,அரிக்கை விட்டுக்கொண்டும் காலத்தை வீணாக்காதிர்.