14.10.2008.
இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி.பி.சி. செய்திச் சேவையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில்
உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்து வாக்குகளைப் பெற தாம் முயலவில்லை என்றும், 1956 ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சினையை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தை அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் புறக்கணித்துள்ளதால், அவர்கள் இலங்கைப் பிரச்சனையை வெறுப்பதாக தாம் கருதவில்லை என்றும் தம் மீதான கோபம் காரணமாகவே அவர்கள் வரவில்லை என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடுகின்ற சூழலில், சிறார்களை படைகளில் சேர்ப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, சகோதர கொலைகளை தாம் தொடர்ந்து எதிர்த்தும் கண்டித்தும் வந்துள்ளதாகவும் தமிழக முதல்வர் கூறினார்.
.
இந்திய அரசு போர் நிறுத்தம் வேண்டும் என்று நினைத்தால் அதை 24 மணி நேரத்தில் கொண்டு வர முடியும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.