குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையானது, இந்த நாட்டில் இன்னுமொரு சாபக்கேட்டை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் போதெல்லாம், அவற்றுக்கெதிராக எதுவிதமான எதிர்வினைகளையும் வெளிப்படுத்தாமல் மௌனித்துக் கிடக்கும் அரசியல்வாதிகளின் பச்சோந்தித்தனங்களை முஸ்லிம் சமூகம் மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்குச் சென்று நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு முற்பட்டமையினைக் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அஷ்ஷெய்க் ஹனீபா மதனி மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,
குற்றங்களைத் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காகவும் புலனாய்வுகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் குற்றமற்ற இடமாகவும், புனிதத் தலமாகவும் போற்றப்படுகின்ற இறை இல்லங்களையும், மத வழிபாட்டுத் தலங்களையும் இலக்கு வைத்துள்ளனர்.
இந்நடவடிக்கையானது இந்த நாடு இன்னுமொரு சாபக்கேட்டை வருந்தி இழுத்து, தலையில் போட்டுக் கொள்ள முற்படுவதை வெளிப்படையாகவே காட்டுகிறது.
யுத்தத்தின் காயங்களை முற்றிலுமாக ஆற்றுப்படுத்த முடியாமல் நாடும், மக்களும் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னுமொரு சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாட்டுத் தலமான மசூதிகள் மீது தாக்குதல் மேற்கொள்வதும், அங்கு தொழுகையில் ஈடுபடுவோரை வன்முறையாளர்களைக் கொண்டு துரத்த முற்படுவதும் அவருவருக்கத் தக்க இழி செயல்களாகும்.
இவ்வாறான சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான், பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திரட்ட முற்பட்டமையினையும் முஸ்லிம் சமூகம் பார்க்கின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பள்ளிவாசல்களின் விபரங்களைச் சேகரிப்பதற்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் எத்தனை? போதைப் பொருள் விநியோக மையங்களின் எண்ணிக்கை என்ன? விபச்சார விடுதிகள் எங்கெல்லாம் இயங்குகின்றன? நாட்டிலுள்ள பாதாள உலகக் கோஷ்டிகளில் யார் யாரெல்லாம் உள்ளனர்? போன்ற விடயங்கள் குறித்து கணக்கீடு செய்து, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களாயின் இந்த நாட்டிலுள்ள பௌத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்தோரும் மகிழ்ச்சியடைவார்கள்.
நாட்டில் போதைப் பொருள் பாவனை, அவற்றினால் ஏற்படும் குற்றச் செயல்கள், பதாள உலகத்தாருக்கிடையிலான படுகொலைச் சம்பவங்கள், விபச்சாரம், லஞ்சம் ஊழல் என்று குற்றச் செயல்கள் மலிந்துபோய்க் கிடக்கும் நிலையில், அமைதியுடன் இறைவனைத் துதிக்கும் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து, அவை குறித்த தகவல்களைத் திரட்டுவதை முஸ்லீம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளிவாசல்களை தமது உயிரினும் மேலானதாக முஸ்லிம்கள் பார்க்கின்றனர்.
பள்ளிவாசல்களை மாசுபடுத்தும் செயலானது இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலும் பெருந் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் போது, அரசில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌன விரதம் இருந்தமையினையும், எல்லாம் முடிந்த பிறகு, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் பெரிய விடமில்லையென அவர்கள் கூறித் திரிந்தமையினையும் முஸ்லீம் சமூகம் மிக வேதனையோடு பார்க்கின்றது.
பள்ளிவால்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக எதையாவது பேசினால், தாமும் தமது சந்ததியும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகபோகத்தில் ஏதாவது மண் விழுந்து விடுமோ எனும் பயத்தில்தான், மேற்சொன்ன அரசியல்வாதிகள் தமது புலன்களையெல்லாம் பொத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான பச்சோந்திகளின் மௌனமானது சமூகத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். இவர்களை முஸ்லிம் சமூகம் மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், சமயத் தலங்கள் குறிவைக்கப் படுகின்றமைக்கு எதிராக, இந்த நாட்டிலுள்ள பௌத்த உயர்பீடத்தின் மகாநாயக்க தேரர்களும், இந்து சமயத் தலைவர்களும், கத்தோலிக்க ஆயர்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
I think Mr. Haniffa is right. They want to do some realignment and rearrangement outside the North and East.