வன்னியில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 296 பேர் காயமடைந்துள்ளதுடன் 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பௌர்ணமி தினமன்று மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சுமார் 200 பேர் காயமடைந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு வெளியே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி தினத்தன்று கால்நடைகளைக் கூட கொல்லக் கூடாதென சட்டம் அமுல்படுத்தப்படும் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவிச் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், மோதல் தவிர்ப்பு வலயத்தில் மேற்கொள்ளப்படும் படையினரின் முன்நகர்வுகள் பெரும் சிவிலியன் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுமத்தளான் பகுதியில் சுமார் 200,000 அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து சமூக நலக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது எனவும், அரசாங்கப் படையினர் சமூக நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நேரத்தில் படையினர் இதுவரை காலமும் ஈட்டி வந்த நற் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆனந்த சங்கரி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=8368&cat=1
//… மறுபுறம் புலி எதிர்ப்புக் காச்சல் பிடித்தவர்கள் அப்பாடா அதி உத்தம மேன்மை தங்கிய மீட்பர் மஹிந்தராஜபக்ஸவும் அவரது சகோதரர்களும் அரசாங்கப் படைகளும்; புலிப் பாசிசவாதிகளிடம் அல்லது புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து வடகிழக்கை விடுவித்து தமிழ் மக்களுக்கு சுபீட்சத்தையும் நல்வாழ்வையும் வழங்கி விட்டார்கள். இன்னும் வழங்கப் போகிறார்கள். சிறீலங்கா ஜனநாயக சோசலிச சமதர்மக் குடியரசில் அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழப் போகிறார்கள அங்கே தேனும் பாலும் ஓடப்போகிறது என்கிறார்கள்.
இவற்றையும் தாண்டி அண்மையில் இலங்கை சென்று வந்த புலம்பெயர் ஜனநாயக ஜாம்பவான்கள் இலங்கையில் பிரச்சனைகளே இல்லை சிறுசிறு பிரச்சனைகள்தான் உண்டு இனரீதியான பெரிய பிரச்சனைகள் இல்லை என்றார்கள். நல்ல வேளை தமிழர்களுக்கு சாப்பாட்டுக்கு மட்டும் தான் பிரச்சனை உண்டு என இன்னும் இவர்கள் கூறவில்லை.
மாண்பு மிகு அமைச்சர் கருணாவேர், 83 இனக்கலவரம் ஒன்றுதான் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பிரச்சினை, அதற்குப் பின்பு சிங்களவர்கள் தமிழர்களைக் கட்டியணைத்து இன்புற்று இருக்கிறார்கள் எனக் கூறுகிறார். இந்த 83 இனக்கலவரம் கூட தனது தலைவர் மகிந்த ராஜபக்ஸ இருந்திருப்பாரானால் ஏற்பட்டிருக்காது எனக் கூறியுள்ளார்.
பழம் பெரும் அரசியல்வாதி என தன்னைப் புகழ் பாடும் விருது பெற்ற வீரர் ஆனந்தசங்கரியும் நேற்று வரை இலங்கையில் இன அழிப்பென்ற ஒன்று இடம்பெறவில்லை என கடிதம் எழுதி வந்தார். ஆனால் என்னவோ தன்னுடைய அரசியல் எதிரி டக்ளஸ் தேவானந்தாவை வடக்கின் முதலமைச்சராக மகிந்த முடி சூட்டப் போகிறாரென்ற செய்திகள் சூடு பிடிக்க திடீரென நித்திரை விட்டெழுந்து மக்களின் கொலைகள் பற்றிப் பேசுகிறார். கடந்த பல மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்த போது மௌனித்திருந்த ஆனந்தசங்கரி பௌர்ணமி தினத்தில் கால்நடைகளைக் கூடக்கொல்லக் கூடாது என்ற நாட்டில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிவிட்டார் என்ன அதிசயம்…//ராஜா பரமேஸ்வரி
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=8397&cat=5