எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு என்ற அறியப்ப்பட்ட தன்னார்வ நிறுவனம் இலங்கையில் ஊடக அடக்குமுறையும் தணிக்கையும் அதிகரித்திருக்கும் அதே வேளை தாக்குதலுக்கும் கொலைக்கும் உள்ளாகும் ஊடகவியலாளர்களின் தொகை குறைந்திருப்பதை வரவேற்றிருக்கிறது. இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சனை என்பது தன்னார்வ நிறுவனங்கள் கருதுவது போன்று மனித உரிமை குறித்த பிரச்சனை அல்ல. அதன் ஊற்றுமூலம் ஒரு மக்கள் கூட்டத்தின் தன்னுரிமை குறித்த பிரச்சனையிலிருந்தே ஆரம்பிக்கிறது. 55 ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகக் குறிப்பிடும் இவ்வமைப்பு கொல்லப்பட்டவர்களும் வெளியேறியவர்களும் தவிர எஞ்சியவர்கள் அரச ஆதரவு வியாபாரிகளும் பலவீனமான நிலையிலுள்ள மனிதர்களுமே என்பதைச் சுட்டிக்காட்டத் தவறியுள்ளது. இதன் காரணமாகத் தான் கொலைகளின் அளவு குறைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டத் தவறியுள்ளது.