04.03.2009.
இலங்கையின் வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச படையினரால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஒரு மானுடப் பேரவலமே கட்டவிழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
சிக்குண்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து பெருமளவில் வெளியேற அனுமதிக்குமாறு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருதரப்பினருக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவில் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துவருகிறது.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக கடுமையான தாக்குதலை நடத்திவரும் இலங்கை அரசாங்கம், யுத்த பிரதேசத்திற்குள் மிகச் சிறிய அளவிலேயே உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுமதித்துவருகிறது.
காயமடைந்தவர்கள் சிலரை மீட்டு படகுகள் மூலமாக அப்புறப்படுத்துவதில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வெற்றி பெற்றுவந்துள்ளனர்.
ஆனாலும் அந்த இடத்தை “ஓர் நரகம்” என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜாக் த மயோ வருணித்துள்ளார்.
யுத்தப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் அகன்று செல்வதை அனுமதிக்க விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. பொதுமக்கள் அகன்றுவிட்டால் அரச படைகள் தம் மீதான தாக்குதலின் உக்கிரத்தை மேலும் தீவிரப்படுத்தி தம்மை நிரவித்தள்ள அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று புலிகள் அஞ்சுகிறார்கள்.
BBC.