இலங்கையின் யுத்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையானது இது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த வன்முறைகள் தொடர்பில் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்த காலத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பிலான சந்தேகங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தெளிவுபடுத்த வேண்டும் என கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை செய்ய இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டு விட்ட நிலையில், முழுமையான சர்வதேச சுயாதீன விசாரணையே இதனை தெளிவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் சர்வதேச யுத்த சட்டமீறல், இரு தரப்பினரும் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, சர்வதேச அரசாங்கங்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்