20.03.2009.
இலங்கையில் தொடரும் மோதல்களால் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடுவதற்கு எடுத்த முயற்சிகள் சீனாவின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன.
மோதல்கள் காரணமாக இந்த வருடம் ஜனவரி 20ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி வரை இலங்கையில் 2,683 பேர் கொல்லப்பட்டிருப்பதால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விடயம் குறித்துக் கலந்துரையாடுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படாதபோதும், வேறு விடயங்கள் என்ற தலைப்பின் கீழ் இலங்கை பற்றி கலந்துரையாடப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றிருக்காத நாடுகளான, அவுஸ்ரியா, மெக்சிக்கோ, கொஸ்டா ரிக்கா உள்பட ஏனைய நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தன.
இலங்கை பற்றிக் கலந்துரையாடுவதற்கு ஏனைய நாடுகள் இணக்கம் தெரிவித்த போதும், பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சீனா மாத்திரம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது இலங்கையின் உள்விவகாரம் என சீனா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுடன் வாதிட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் நிலைமையானது சர்வதேச சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என சீனா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் கருத்தைப் போன்ற வாதத்தையே ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைப் பிரதிநிதிகளும் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கதைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை சில மாதங்களுக்கு முன்னர் மெக்சிக்கோ முன்வைத்திருந்தது. இந்தப் பிரேரணைக்கு பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளான பிரித்தானியாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்தன.
அதன் பின்னர், இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. பிரித்தானியாவுக்கு இது ஒரு பாரிய ஏமாற்றம் எனக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இலங்கை விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியிருந்தது.