இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் சர்வாதிகார வலைக்குள் சிக்கியிருப்பது குறித்து சாட்சியங்களுடன் ஒப்புவிப்புவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 12வது கூட்டத்தொடரில் முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் முறைப்பாடு சம்பந்தமாக இந்த வார இறுதியில் ஜெனீவா அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, முறைப்பாட்டை ஒப்புவிப்பதற்காக குறித்த சட்டத்தரணிகள் வீடியோ சாட்சியங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக நம்பகத்தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட சிலரும் ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 13வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சட்டமா அதிபர் அங்கு சென்றுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமை அமைச்சு தெரிவித்த போதிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மொஹான் பீரிஸ் உள்ளிட்டோருக்கு இதுவரை அழைப்பெதனையும் விடுவிக்கவில்லையெனத் தெரியவருகிறது.
மனித உரிமைப் பேரவையின் 13வது கூட்டத்தொடர் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 26ம் திகதி வரை நடைபெறவுள்ளது.