இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.
“இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்வுமுறை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்தன. எனவே, சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது” என எரிக் சொல்ஹெய்ம் அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.
சமஷ்டிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், அதனையே சர்வதேசம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இலங்கையில் தனியான தமிழ் ஆட்சியொன்று உருவாவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லையெனவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகத் தடுத்துவைத்துள்ளார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், பொதுமக்களைச் சுதந்திரமாக வெளியேற விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேநேரம், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உறுதிமொழிக்கமைய அரசாங்கமும் தாக்குதல்களை நடத்தக்கூடாது என எரிக்சொல்ஹெய்ம் வலியுறுத்தியிருந்தார்.