இடையறாது முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் பேரலவத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனை தடுக்கும் முகமாக இலங்கையில் யுத்த நிறுத்த அமுல்படுத்த மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை மத்திய உதாசீனம் செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் இந்திய மத்திய அரசு செயற்படத் தவறியுள்ளதென இந்திய கம்யூனிச கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.பாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு நாட்டின் உள்விவகாரம் என இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு கைகட்டி மௌனம் காக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறப்படும் போது எல்லைகளை கருத்திற்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுடன் எமக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டு அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க தமிழகம் தயாராக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தினூடாக அனுப்பி வைக்கத் தயாரில்லை என பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அகில இந்தியச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி. இராசா, சிறிலங்காவிற்குச் செய்யும் இராணுவ உதவிகள் எதுவாயினும் அது அங்கு தமிழ் மக்களை கொல்வதற்கே பயன்படுத்தப்படும் என்றும், அப்படிச் செய்வது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறினார்.தமிழ்நாட்டு மீனவர்களின் மீ்ன்பிடி உரிமையை பறிக்கும் கச்சத்தீவு ஒப்பந்தம், இலங்கை இனப்பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசு தெளிவான நிலையை எடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாற்றினார்.
இலங்கையில் போரை நிறுத்துவிட்டு, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு சிறிலங்க அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இராசா கேட்டுக்கொண்டார்.