27.02.2009.
பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும், அதன் ஊடாகப் பெறும் ஆதாரங்களைக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்து பிரித்தானிய அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் இலங்கையிலுள்ள வளங்களைச் சூறையாடியதுடன், சிங்கள மற்றும் இந்துக் கலாச்சாரங்களைப் பின்பற்ற விடாமல் தடுத்து கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகளால் பிரித்தானியா இலங்கையில் இனங்களுக்கிடையில் பிரச்சினையைத் தோற்றுவித்ததுடன், நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
“கோர்டன் பிரவுண் மற்றும் டேவிட் பிலிபான்ட் ஆகியோரின் பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை நாட்டை ஆக்கிரமிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது. இதனால்தான் காலனித்துவ ஆட்சியின் போது இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கேட்க ஹெல உறுமய தீர்மானித்தது” என்றார் உதய கம்மன்பில.
இதேவேளை, 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையைக் கண்டறிவதற்கு ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளரும், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான கொட்டகதெனிய தெரிவித்தார்.
“அந்த 600 பொலிஸாரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் கட்டளைக்கு அமைய சரணடைந்தபோதும் அவர்களை விடுதலைப் புலிகள் கைதுசெய்ததாக பொலிஸாரின் படுகொலை குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்த கருணா அம்மான் கூறியிருந்தார்” என்றார் கொட்டகதெனிய.