இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.
அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் வெளியிட்டார்.
தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறுகிறார்.
போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறுகிறார்.
போர் இடம் பெற்ற சமயத்தில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தன்னால் சரியான கணக்கு தரமுடியாது என்றும் தெரிவிக்கிறார்.
விடுதலைப் புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை தான் பார்க்கவில்லை என்று கூறும் தமிழ்வாணி, ஆனால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவருமே ஷெல் தாக்குதலால்தான் காயப்பட்டு வந்தார்கள் என்று தெரிவிக்கிறார்.
BBC.