இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அமர்வுகளின் போது சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகள் அமர்வுகளை நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளன.
மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இதுவரையில் பத்து விசேட அமர்வுகளே மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனம், டார்பூர், லெபனான், மியன்மார், கொங்கோ, போன்ற நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தவே இந்த அமர்வுகள் நடைபெற்றிருந்தன.
இதேவேளை, அகதி முகாம்களுக்கு சுதந்திரமாக செல்ல தொண்டு நிறுவனங்களை அனுமதிக்குமாறு பல சர்வதேச நாடுகளும், தொண்டு நிறுவனங்களும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.