ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல தப்ப முயன்ற இரு அகதிகள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்ல வந்த படகோட்டி ஆகிய மூன்று பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசும் அதற்கு முன்னைய இலங்கை அரசின் இனப்படுகொலையிலிருந்து தப்பிச் சென்ற அகதிகளை அடிமை விலங்குகள் போன்று நடத்திவருகின்றது. வேறு வழியின்றி அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயலும் அகதிகளை பாதுகாப்பற்ற கடற்பயணம் கொலை செய்கிறது. இலங்கை இந்திய அரசுகளும் அவுஸ்திரேலிய அரசும் இவர்களைக் கழுகுகள் போலத் துரத்துகின்றன.
இவற்றை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் இலங்கைக்கே தப்பிச் செல்ல முயன்ற அகதிகளை இன்று தமிழ் நாட்டின் காவல் துறை கைது செய்தது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு அகதி முகாமில் இருந்த விமல்ராஜ் (26), அவரது மனைவி நிஷாந்தினி (24) இருவரும் இலங்கை திரிகோணமலைக்கு செல்ல கடந்த திங்கள்கிழமை ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர். புதன்கிழமை இரவு இவர்கள் ராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து படகுமூலம் இலங்கை செல்ல தயாராக இருந்துள்ளனர்.
இச்சமயத்தில் அங்கு ரோந்துவந்த சுங்கத்துறை அதிகாரிகள் இவர்கள் மீது சந்தேகப்பட்டு விசாரணை செய்தபோது இருவரும் இலங்கைக்குச்செல்ல படகு ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. அருகே கடலில் படகு நிறுத்திவைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து படகை நோக்கி அதிகாரிகள் சென்றபோது அதிலிருந்தவர்கள் படகை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றனர். அதிகாரிகள் அவர்களைப்பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவர் படகோட்டி எனத் தெரியவந்தது. மேலும் படகில் இருந்தவர்கள் தப்பிவிட்டனர்.
விசாரணையில் பிடிபட்ட படகோட்டி தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் என்றும் இவருடன் இரண்டு பேர் வந்ததாகவும் ஒருவர் படகுடன் சென்றதாகவும் ஒருவர் கடற்கரை பக்கம் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். தப்பிச் சென்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மேலும் பிடிபட்ட கணவன்-மனைவி மற்றும் படகோட்டி ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.