இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா. சபை இதில் தலையிட மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் துணைக் குழு முடிவெடுத்துள்ளது.
.
தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன், அமைப்பாளராகச் செயல்படும் இந்த அமைப்பின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீதியரசர்கள் மோகன், கோகுல கிருஷ்ணன், பாஸ்கரன், ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை, சண்முகம் மற்றும் பேராசிரியர் தனபாலன் ஆகியோரும் இந்த அமைப்பின் செயலாளர்கள் கி. வீரமணி மத்திய அமைச்சர்கள் ஆ. இராசா, கனிமொழி எம்.பி. ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குழுவின் முடிவுகள் குறித்து அமைப்பாளர் துரைமுருகன் கூறியதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது நடக்கும் மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்துவது, தனிப்பட்ட அமைப்பால் முடியாது.
இதை, இந்திய அரசுதான் வலியுறுத்த முடியும். எனவே, ஐ.நா. அமைப்பிடம் மத்திய அரசு வற்புறுத்த இந்த குழு மத்திய அரசை வலியுறுத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது. எங்கள் கோரிக்கை, லட்சியம், விருப்பம் இவற்றை ஏற்றுக் கொண்ட ஒத்த கருத்துக்களைக் கொண்ட சர்வதேச அமைப்புகளிடமும், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளிடமும் இது குறித்து முறையீடு செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சனையை மகஜர் வடிவில் எடுத்துச் சென்று, சென்னை மற்றும் டெல்லியில் உள்ள உலக நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் அளித்து அவர்கள் கவனத்தை ஈர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் உணர்ச்சிப் பூர்வமான இந்த விஷயத்தை எடுத்துச் சென்று மக்களிடம் தெரிவிப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனையை மகஜர் வடிவில் எடுத்துச் சென்று, சென்னை மற்றும் டெல்லியில் உள்ள உலக நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் அளித்து அவர்கள் கவனத்தை ஈர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் உணர்ச்சிப் பூர்வமான இந்த விஷயத்தை எடுத்துச் சென்று மக்களிடம் தெரிவிப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான பிரச்சனையாக இருப்பதால் இதற்கான ஆவணம் தயாரிப்பதற்காக குழுவில் உள்ள நீதியரசர்கள் மோகன், சண்முகம் மற்றும் பேராசிரியர் தனபாலன் ஆகியோர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி குழுவின் அடுத்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்த கமிட்டி தயார் செய்த ஆவணம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
இது குறித்து தகவல்கள் அளிக்க விரும்புபவர்கள் 009144 24472666 என்ற எண்ணிலோ, ‘durai66@bsnl.in’ இமெயில் முகவரியிலோ தெரிவிக்கலாம். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.