1
எப்பொழுதில் வாழ்வோம் : நிலா
அழிவுகளின் எச்சங்களிலிருந்து,
அபிவிருத்தியின் முகங்கள்
அகோரமாய் முளைக்கின்றன.
சுவரொட்டிகள் எதிகாலம் பேசிக்கொள்ள
நிகழ்கால நம்பிக்கையோடு
அவலங்களில் முளைக்கும்
பிஞ்சு முகங்கள்.
ஒளிபடைத்த கண்கள்,
ஆயிரம் ஆயிரமாய்
ஓலமிட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கின்றன.
மறுவாழ்வு பற்றிய பேச்சுக்களில்
வட்டமாயும், நீளமாயும்
உணர்ச்சி மேசைகளில் உட்கார்ந்து
பேசிக்கொள்ளும் உயர்குடி மனிதர்கள்,
தவணை முறையில் வந்துசெல்ல,
அந்த முகாமின் நெரிசலில்
உணவின்றி ஊஞ்சலாடும் எதிர்காலம்.
போருக்குப் பின்னதான
புதிய காலம் என்கிறார்கள்.
அடிமைகளுக்குப் பின்னான
புதிய சுந்ததிர மனிதர்களாக
எப்போழுதில் வாழ்வோம்?
2
வினை விளைகிறது : சி.உமா
இங்குவா என உற்றவரும்
இங்குவா என மற்றவரும் மாறி மாறியழைக்க
எங்கு போவதெனத் தெரியாமல்
பங்குக்கிரு பக்கமும் போய்நாம்
பட்ட துன்பம் சொல்லிமாளா .. ..
போய்த்தப்ப வழியின்றி
நாய்போ லெமைச்சுற்றி
நாளுக்குக் கொஞ்சமென நாட்குறித்து
ஆளுக்கொரு பொய்
வேளைக்கொன்றாய் விடுத்தபடி
வேட்டையாடிய
புதினங்கள் எல்லாம்
பதியப்படுகின்றன, இல்லை பார்க்கப்படுகின்றன
வன்னியில் கொலைப்பயிர் நட்டவர்
மண்ணினில் அறுவடையின்று அமோகமாய் நடக்கிது
வினை விதைத்தவர் வினை விளையிது
மனை அழியுது, மன் துடிக்கிது?
யப்பான், லிபியா வென்றே
தப்பாமல் தொடருது .. ..
வன்னியில் தப்பிப்பிழைத்த
என்னுயிர் தன்னிடம்,
இதனைப் பார்த்தொரு வேண்டுதல்
இதயத் தினின்றும் எழுகிறது
அவர் அறியாமற் செய்தார்
வேண்டாம் தண்டனை விட்டுவிடும்
யாம்பட்ட துன்பத்தை அவனியில்
யாருமினிப் பெற வேண்டாம்|